×

மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.10 லட்சம் கோடி செலவாகும்: ஆய்வாளர் கணிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.10 லட்சம் கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவை குறைக்கவும், அரசின் திட்டங்கள் தடையின்றி செயல்படவும் நாடு முழுவதும் அனைத்து மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென ஒன்றிய பாஜ அரசு வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில், தேர்தல் செலவு குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியவரும், அரசு கொள்கைகளின் ஆய்வாளருமான பாஸ்கரராவ் கூறியிருப்பதாவது: எனது கணிப்புப்படி, ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்தினால் ரூ.10 லட்சம் கோடி வரை செலவாகலாம். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்த ரூ.1.20 லட்சம் கோடியும். நாடு முழுவதும் உள்ள 4500 சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்த ரூ.3 லட்சம் கோடியும், அனைத்து மாநகராட்சிகளுக்கு (500 இடங்கள்) தேர்தல் நடத்த ரூ.1 லட்சம் கோடியும் ஜில்லா பரிஷத் (650), நகராட்சி (7000) மற்றும் ஊராட்சிகளுக்கு (2.5 லட்சம்) தேர்தல் நடத்த ரூ.4.30 லட்சம் கோடியும் செலவாகும்.

இதில் தேர்தல் ஆணையம் 20 சதவீதம் மட்டுமே செலவழிக்கும். இந்த செலவில், புதிய மின்னணு இயந்திரங்கள் வாங்குவது சேர்க்கப்படவில்லை. இதுதவிர ஒன்றிய, மாநில அரசுகள் மட்டுமே அனைத்து செலவையும் செய்வதில்லை. கட்சிகளும், வேட்பாளர்களும் பிரசாரத்திற்காக செலவு செய்கின்றன. பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பிரசாரம் தொடங்கி விடுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து முடியும் வரை வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தர வேண்டுமே தவிர, கட்சிகள் தர வேண்டியதில்லை.

கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பாக கட்சிகள் ரூ.6,400 கோடி வசூலித்து, தேர்தலில் ரூ.2,600 கோடி செலவிட்டன. எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேர்தல் செலவு கணிசமாக குறைந்து விடாது. பிரசாரம், தேர்தல் அதிகாரிகளின் செயல்திறன் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை கட்சிகள் முழுமையாக பின்பற்றுவது ஆகியவற்றின் மூலம் மட்டுமே தேர்தல் செலவை கட்டுப்படுத்த முடியும். ஒரே வாரத்தில் அனைத்து தேர்தலும் நடத்தி முடித்து, கட்சிகளும் முழுமையாக தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றினால் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை செலவை மிச்சப்படுத்தலாம். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்தாமல் தேர்தல் செலவை கணிசமாக குறைக்கவும் வாய்ப்பில்லை இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.10 லட்சம் கோடி செலவாகும்: ஆய்வாளர் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Legislative Assembly ,New Delhi ,
× RELATED நாடாளுமன்ற இணையதளத்தை எம்பிக்கள்...