×

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கொளத்தூரில் ரூ.27.03 கோடி மதிப்பில் 162 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

வில்லிவாக்கம்: சென்னை கொளத்தூர், ராஜாதோட்டம் திட்டப் பகுதியில் 1975ம் ஆண்டு 326 சதுர அடியில் தரை மற்றும் 2 தளங்களுடன் கட்டப்பட்ட 84 குடியிருப்புகள், சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. இந்த குடியிருப்புகளை அகற்றி விட்டு, ரூ.27.03 கோடி மதிப்பீட்டில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 162 புதிய குடியிருப்புகள் கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்புகளில், ஒவ்வொரு குடியிருப்புகளும் 410 சதுர அடி பரப்பளவில், பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, தனித்தனியே குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படவுள்ளது.

இத்திட்டப் பகுதியில் 2 மின்தூக்கிகள் மற்றும் மின்னாக்கி வசதிகள், மழைநீர் கால்வாய்கள், தெரு விளக்குகள், மற்றும் கான்கிரீட் சாலைகள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது. இங்கு கட்டப்படும் குடியிருப்புகள் ஏற்கனவே இருந்த 84 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கப்படும். ஒரு குடியிருப்பிற்கான கட்டுமான தொகை ரூ.17 லட்சம். இந்த குடியிருப்பிற்கு தமிழ்நாடு அரசு மானியம் 7 லட்சம் ரூபாயும், ஒன்றிய அரசு மானியம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஏற்கனவே இங்கு வசித்த மறுகட்டுமான பயனாளிகளின் நலன் கருதி மீதமுள்ள தொகையில், 7 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசே ஏற்று பயனாளிகளின் பங்களிப்பு தொகையை 83 ஆயிரம் ரூபாய் என நிர்ணயித்து அரசு ஆணையிட்டுள்ளது.

மீதமுள்ள 78 குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. அவர்களுக்கு 7 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட பயனாளி பங்களிப்புத் தொகையை தமிழ்நாடு அரசு கவனமுடன் பரிசீலித்து 2 லட்சம் ரூபாயை குறைத்து 5 லட்சம் ரூபாயாக நிர்ணயித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் மறு குடியமர்வு செய்யவுள்ள குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையினை 8,000 ரூபாயிலிருந்து 24,000 ரூபாயாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ராஜாதோட்டம் திட்டப்பகுதியில் மறுகுடியமர்வு செய்யப்படவுள்ள 84 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத்தொகையாக தலா 24 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 20 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் முதலமைச்சரால் 30.8.2022 அன்று வழங்கப்பட்டது.

இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 1583.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 15,505 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கொளத்தூரில் ரூ.27.03 கோடி மதிப்பில் 162 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Urban Habitat Development Board ,Chief Minister ,M. K. Stalin ,Villivakkam ,Chennai ,Rajathottam ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED தென்சென்னை தொகுதியில்...