×

வாடிக்கையாளர்களுக்கு நிலம் வழங்காமல் மோசடி; ரியல் எஸ்டேட் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர்: பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர், வீட்டுமனை விற்பனை செய்யும் மஞ்சு குரூப்நிறுவன விளம்பரங்களை பார்த்து ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள சொர்ணகாந்தா கிராண்ட் சிட்டியில் 2,063 சதுர அடி கொண்ட இரண்டு நிலங்களுக்கு முன் பணமாக ரூ.11 லட்சத்து 78 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால், அவருக்கு நிலத்தை பதிவு செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுதொடர்பாக மோகன் தமிழ்நாடு மாநில சட்டப் பணி ஆணையத்திடம் 2019ல் புகார் அளித்தார். 2020ல், சென்னை மாவட்ட சட்டப் பணி ஆணை குழு வழக்கை திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றியது. இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.

இந்நிலையில், நிலம் பத்திரப்பதிவு செய்து தருவதாக ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் மஞ்சு குரூப் சம்பந்தப்பட்டவரிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர். இருப்பினும், இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி லதா மகேஸ்வரி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அவர் செலுத்திய ரூ.11 லட்சத்து 78 ஆயிரம் பணத்திற்கு இழப்பீடாக 7 ஆண்டுகளுக்கு 9 சதவிகிதம் வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்துமாறும், 7 ஆண்டுகள் அவரை அலைக்கழிப்பு செய்தும், மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதால் இழப்பீடாக ரூ.1 லட்சமும் வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும், பணத்தை 6 வாரத்திற்குள் செலுத்த தவறினால் கூடுதலாக 12 சதவீதம் வட்டியுடன் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இதேபோன்று, மற்றொரு வழக்கில் திருவள்ளூர் அடுத்த மேலக்கொண்டையூர் கிராமத்தில் மஞ்சு குரூப்புக்கு சொந்தமான சொர்ணகாந்தா நகரில் திருவள்ளூர் காமராஜர் நகரைச் சேர்ந்த அணில் சாலமன் என்பவர் 1,232 சதுர அடி கொண்ட இரண்டு நிலத்திற்காக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து பதிவு செய்துள்ளார். ஆனால் அவருக்கு நிலத்தை ஒப்படைக்காமல் மற்றொருவருக்கு அந்த நிலத்தை ஒப்படைத்து மோசடி செய்துள்ளனர்.
இதனால், அணில் சாலமன் திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் செலுத்திய ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை மஞ்சு குரூப் திருப்பி கொடுத்தது. ஆனால், பத்திரப்பதிவு செய்து தருவதாக ஏமாற்றியதற்காக, 7 ஆண்டுகளுக்கு 9 சதவீதம் வட்டியும், அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் ரூ.50 ஆயிரம் இழப்பீடாகவும், வழக்கு செலவுக்காக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது. இவைகளை 6 வாரத்திற்குள் தராவிட்டால் மேலும் 12 சதவீதம் வட்டியுடன் செலுத்தவும் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

The post வாடிக்கையாளர்களுக்கு நிலம் வழங்காமல் மோசடி; ரியல் எஸ்டேட் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Mohan ,Bengaluru ,Manju Group ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் 70 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது..!!