சென்னை: தடையை மீறி அண்ணாமலை ஊர்வலம் மற்றும் சாலை மறியல் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியின் போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் எதிரொலியாக 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் முடிவில் அண்ணாமலை தனது கட்சியினருடன் போலீசாரின் தடையை மீறி நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அண்ணாமலையை பாதி வழியில் மறித்து தடுத்தனர்.
உடனே அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணாமலை தலைமையில் நடந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருந்தாலும், போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடந்தது. அதோடு இல்லாமல் பேரணியாக செல்ல முயன்ற போதே தடுத்து நிறுத்தி இருந்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்காது.
ஆனால் போலீசார் அண்ணாமலை தனது கட்சியினருடன் சிறிது தொலைவு பேரணியாக சென்றதை தடுக்காததால் தான் சாலை மறியல் போராட்டமாக மாறியது. எனவே, அண்ணாமலை போராட்டத்தை சரியாக கையாள தவறியதாக சென்னை மாநகர காவல்துறையின் கிழக்கு மண்டல இணை கமிஷனராக இருந்த திஷா மிட்டல் அதிரடியாக கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளிடம் உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர். அதேபோல், சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடந்த இடத்தில் போதிய இட வசதி இல்லை. கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கான முன்னேற்பாடுகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியாக செய்யவில்லை.
இதனால் பொதுமக்கள் நிகழ்ச்சி நடந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலின் போது முதல்வரின் வாகனம் சிக்கியது. இதனால் அங்கு பாதுகாப்பாற்ற சூழ்நிலை ஏற்பட்டது.
பிறகு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலையில் இறங்கி முதல்வர் செல்ல வழியை ஏற்படுத்தினர். இதற்கிடையே தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் இசைக்கச்சேரியின் போது அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டமும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை செய்ய தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜூக்கு உத்தரவிட்டார். அதன்படி தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் நேரில் சென்று இசை நிகழ்ச்சி நடந்த பகுதியை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அதைதொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை சரியாக கணக்கிடாத காரணத்தால் தாம்பரம் மாநகர காவல் துறையின் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் தீபா சத்யன் அதிரடியாக கட்டாய காத்திருப்போர் பட்டியருக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு எஸ்பியாக இருந்த ஆதர்ஷ் பச்சேரா திருநெல்வேலி நகர கிழக்கு துணை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா நேற்று பிறப்பித்தார்.
*இம்மானுவேல் சேகரனார் குருபூஜையில் லட்சம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சி பாதுகாப்பு போலீசாருக்கு பாராட்டு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனார் குரு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், ஐஜி நரேந்திரன் நாயர் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சி முடிந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அதில் ஒரு சிறிய அசம்பாவிதமோ, விபத்தோ இல்லாமல் அமைதியான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த அதிகாரிகளுக்கு உள்துறைச் செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
The post அண்ணாமலை ஊர்வலம், ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி குளறுபடி 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு appeared first on Dinakaran.