×

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.179.88 கோடி செலவில் குடிநீர் பாதாள சாக்கடை திட்டங்கள்: அமைச்சர்கள், எம்பி தொடங்கி வைத்தனர்

தாம்பரம்: குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 1901 பேருக்கு சிறப்பு மருத்துவ முகாம், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 10 பேருக்கு முதல்கட்டமாக முதல்வர் காப்பீடு அட்டை வழங்குதல், 1வது மண்டலம் அனகாபுத்தூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே மார்க்கெட் தெருவில் ரூ.18.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 17 லட்சம் லிட்டர் கொள்ளளவுடைய புதிய நீர்த்தேக்க தொட்டி மற்றும் 4வது மண்டலம் மேற்கு தாம்பரம் மற்றும் 5வது மண்டலம், கிழக்கு தாம்பரம் பகுதிகளில் ரூ.161 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்பி ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ முகாம், முதல்வர் காப்பீடு அட்டை, முடிவடைந்த குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர்.தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சேவை துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கலந்துகொண்ட அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோரிடம், மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தாம்பரம் பகுதியில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பாதாள சாக்கடை திட்டத்தில் 30 எம்எல்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், குடிநீர் திட்டம் ரூ.18 கோடியில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு சார்பில், ரூ.10 கோடி தரப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார். தற்போது அந்த கட்டிடத்திற்கு ரூ.50 கோடி கேட்டிருக்கிறார்கள்.

எனவே தமிழ்நாடு முதல்வர், அனுமதியை பெற்று புதிய கட்டிடம் சிறப்பான கட்டிடமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு மாநகராட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களது பகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து மனு அளித்துள்ளனர். இதுவரை எப்போதும் இல்லாத அளவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மார்ச் மாதம் சட்டமன்றம் நடைபெற்றபோது, என்னென்ன தொகைகள் ஒதுக்கப்பட்டதோ அனைத்திற்கும் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தாம்பரம் மாநகராட்சி புதிதாக துவங்கப்பட்டது என்பதால் அலுவலர்கள் பற்றாக்குறை உள்ளது. ஏற்கனவே இருக்கின்ற அலுவலர்களை தரம் உயர்த்தி அவர்களுக்கு பதவி உயர்வு அளித்து, சில இடங்களில் பணி அமர்த்தி கொண்டு இருக்கின்றோம். விரைவில் அனைத்து இடங்களிலும் அலுவலர்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றது விரைவில் அது நடைபெறும்,’’ என்றார். நிகழ்ச்சியில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, மண்டல குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, டி.காமராஜ், எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.179.88 கோடி செலவில் குடிநீர் பாதாள சாக்கடை திட்டங்கள்: அமைச்சர்கள், எம்பி தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Tambaram Municipal Corporation ,Tambaram ,Zonal Office ,Tambaram Corporation ,Crompettai ,
× RELATED கலைஞரின் பிறந்தநாளையொட்டி ஏழை,...