×

ஐஎஸ்ஓ தரச்சான்று பெரும் வகையில் 102 காவல் நிலையங்களின் தரம் உயர்த்துவோம்: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொங்கி வைத்த ‘வீரா’ மீட்பு வாகனம் இயக்கும் முறை மற்றும் சாலை விபத்துக்களில் சிக்கும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை மீட்பது குறித்து செயல்முறை விளக்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் கமிஷனர்கள் அஸ்ரா கார்க், பிரேம் ஆனந்த் சின்கா, தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர்,போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் முன்னிலையில், கார் ஒன்று விபத்துக்குள்ளானது போல், அதில் சிக்கிய பொதுமக்களை மீட்பது விரைந்து மீட்பது குறித்து ‘வீரா’ மீட்பு குழுவினர் நடித்து காட்டினர். காரின் கதவுகளை இயந்திரம் மூலம் அகற்றுவது. கார் கண்ணாடியை அகற்றுவது. உள்ளே சிக்கியுள்ள பொதுமக்களை வீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவது என தத்ரூபமாக ‘வீரா’ குழுவினர் நடித்து காட்டினர்.

பின்னர், போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதவலர் தொங்கி வைத்த ‘வீரா’ மீட்பு குழுவினரின் மீட்பு பணிகள் குறித்து செய்முறை நிகழ்ச்சி செய்து காட்டினர். இந்த குழு சென்னையில் எங்கு விபத்து நடந்தாலும் அவசர கால அடிப்படையில் அந்த இடங்களுக்கு சென்ற மீட்பு பணி மேற்கொள்ளும். சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் தானாக இயங்கும் வகையில் 277 சிக்னல்கள் உள்ளன. மற்ற சிக்னல்கள் தானாக இயக்கும் வகையில் மாற்றப்பட்டு வருகிறது. போக்குவரத்து தொடர்பாக சென்னை மாநகர காவல் துறையில் பல ஆண்டுகளாக நல்ல வழிமுறைகள் உள்ளன.

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகள் குறித்து தற்போது டிஜிபி உத்தரவுப்படி விசாரணை நடந்து வருகிறது. அதில் புதிய விதிமுறைகள் ஏதேனும் விசாரணை குழு கொண்டு வந்தால், அது தொடர்பாக சென்னை மாநகர காவல் எல்லையில் நிகழ்ச்சிகள் நடத்தும் குழுவினரிடம் அறிவிக்கப்படும். சைபர் க்ரைம் குற்றவாளிகள் புதுபுது வகை மோசடிகள் மூலம் குற்றங்கள் செய்து வருகின்றனர். சென்னையில் ஒரு நல்ல சிஸ்டம் இருக்கிறது. நல்ல சைபர் பிரிவு உள்ளது. அதன் கீழ் இணை கமிஷனர் தலைமையில் மற்றொரு சைபர் க்ரைம் பிரிவு உள்ளது.

ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் ஒரு சைபர் க்ரைம் காவல் நிலையம் உள்ளது. புதிய சைபர் குற்றங்கள் நடந்தால், அது தொடர்பாக உடனே காவல் துறை சார்பில் டிவிட்டர் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் எச்சரிக்கை விடுத்த வருகிறோம். நைஜீரியா கும்பல் ஒன்று பெங்களுருவில் தங்கி சைபர் மோசடியில் ஈடுபட்டனர். அவர்கள் குறித்து வந்த புகாரின் படி, துணை கமிஷனர் தலைமையிலா குழு கடந்த 10 நாட்களாக பெங்களூருவில் தங்கி, நைஜீரிய கும்பலை கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்தது.

சென்னை மாநகர காவல்துறையில் போக்குவரத்து திட்டம், நிர்பயா திட்டம் என பல திட்டங்கள் உள்ளன. அதை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் தற்போது வரவேற்பாளர் அமைர்த்தப்பட்டுள்ளனர். வடக்கு மண்டலத்தில் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற 15 காவல் நிலையங்களில் வரவேற்பாளர் அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த மாதரி நாம் மாநகரம் முழுவதும் உள்ள 102 காவல் நிலையங்களில் கொண்டு வர வேண்டும். பொதுமக்கள் புகார் அளிக்க வந்தால், அவர்களுக்கு முறையாக மரியாதை அளிக்க வேண்டும். நண்பர்கள் போல் காவல் நிலையம் இருக்க வேண்டும் அது தான் எனது முதல் பணி என்று கூறினார்.

கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், ’’ரவுடிகள் ஒழிப்பு பிரிவில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் ரவுடிகளின் விவரங்கள் சேகரிப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவுவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரவுடிகள் சோதனை வழக்கம் போல் நடந்து தான் வருகிறது. மற்ற மாவட்ட ரவுடிகள் விவரங்கள் அந்த செயலி மூலம் எளிமையாக கண்டுபிடித்துவிடலாம். சிறையில் இருந்து வெளியே வரும் குற்றவாளிகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம்,’’ என்றார்.

மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் கூறுகையில், ‘‘சென்னை மாநகர காவல்துறையில் போக்குவரத்து மாற்றம் என்றால் முன்பே திட்டமிட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அண்ணாசாலையில் கிரின்வேஸ் சாலையில் கேபில் புதைக்கும் பணி நேற்று முதல் தொடங்கி இருக்கிறது. இதற்காக 7 நாள் அவகாசம் கேட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் மாற்றப்பட்ட போக்குவரத்து மாற்றம் குறித்து டிவிட்டரில் உடனே தகவல் அளிக்கப்பட்டது. திடீரென போராட்டம், சாலை மறியல் நடந்தால் தான் உடனே போக்குவரத்து மாற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. நுங்கம்பாக்கத்தில் நடந்த போராட்டத்தில் கூட ஒரு பகுதியில் நாங்கள் போக்குவரத்து சரிசெய்து அனுப்பி கொண்டு தான் இருந்தோம்,’’ என்றார்.

* ரவுடிகள் பட்டியல்
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்று பார்த்தால் 3500க்கும் மேற்பட்டோர்கள் தான் உள்ளனர். அவர்கள் சிறையில் இருந்து வந்த உடனே அவர்களை குறித்து முன்னெச்சரிக்கை வழிமுறை வைத்து இருக்கிறோம். சில ரவுடிகள் தொடர்ந்து வெளியூர்களில் தங்கி திடீரென ஒரு நாள் வந்து குற்றங்கள் செய்துவிட்டு செல்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக ரோந்து வாகனங்கள் மற்றும் வாகன சோதனை நடத்தி வருகிறோம். கமிஷனர் உத்தரவுப்படி முக்கிய ரவுடிகளின் பட்டியல் எடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரவுடிகளின் வழக்குகளை விரைந்து முடித்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுத்து வருகிறோம், என கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்தார்.

* புதிய குழு அமைப்பு
ஆட்டோ ஓட்டுநர்களால் ஏற்படும் புகார்கள் குறித்து போக்குவரத்து இணை கமிஷனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் ஆட்டோ ஓட்டுநர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆடிஓ அதிகாரிகள் எல்லாம் துறை அதிகாரிகளும் அதில் இருப்பார்கள். ஒரு வாரத்தில் அந்த குழு அறிக்கை அளிக்கும். அதன் பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

The post ஐஎஸ்ஓ தரச்சான்று பெரும் வகையில் 102 காவல் நிலையங்களின் தரம் உயர்த்துவோம்: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Police Commissioner ,Sandeep Rai Rathore ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Veera ,Vepperi, Chennai ,Sandeep Roy Rathore ,Dinakaran ,
× RELATED நடிகைகள் குறித்து அவதூறு விமர்சனம்: மருத்துவர் காந்தராஜ் வழக்குபதிவு