
புதுடெல்லி: வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திலும் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், இரு அவைகளின் ஊழியர்களுக்கு புதிய வடிவில் சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி தொடங்கிய நாள் முதல், ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சிகள் 2 அவைகளையுமே ஸ்தம்பிக்க செய்தன.
பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பும் நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசு வெற்றி பெற்றது. ஆகஸ்ட் 11ல் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று ஒன்றிய அரசு திடீரென அறிவித்தது. இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றுவது போன்ற சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், முதல் நாள் கூட்டம் மட்டும் பழைய கட்டிடத்திலும், அதன் பின்னர் மற்ற நாட்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திலும் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவை வட்டாரங்கள் கூறுகையில், ‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத் தொடரை நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது.
இரு அவைகளிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய சீருடை உள்ளிட்ட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மணிப்பூரி தொப்பி, காக்கி பேன்ட், கிரீம் நிற சர்ட் வழங்கப்படும். இரு அவைகளின் ஊழியர்களுக்கும் ஒரே நிற சீருடை வழங்கப்படும். இந்த புதிய சீருடையானது அவை உதவியாளர்கள் உட்பட 271 ஊழியர்களுக்கு வழங்கப்படும். அவையின் பாதுகாப்பு சேவையின் (செயல்பாடுகள்) பாதுகாப்பு அதிகாரிகள் நீல நிற சஃபாரி உடைக்கு பதிலாக, ராணுவ வீரர்கள் அணியும் ஆடைகளை அணிவார்கள். இவர்களுக்கான ஆடை வடிவமைப்பை, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனம் செய்து கொடுத்துள்ளது’ என்றன.
The post வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்? இரு அவை ஊழியர்களின் சீருடையில் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.