×

நாடு முழுவதும் 35 மாநிலங்களில் நடந்த தேசிய லோக் அதாலத் மூலம் 1.67 கோடி வழக்குகளுக்கு தீர்வு: உச்ச நீதிமன்றம் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் 35 மாநிலங்களில் நடந்த தேசிய லோக் அதாலத் மூலம் 1.67 கோடிக்கும் அதிகமான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாக உச்சி நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லி மற்றும் மணிப்பூர் தவிர நாடு முழுவதும் கடந்த 9ம் தேதி தேசிய அளவிலான மூன்றாவது ‘லோக் அதாலத்’ நடைபெற்றது. இந்த லோக் அதாலத்தில், கூட்டுக் குற்றங்கள், வருவாய் வழக்குகள், வங்கி மீட்பு வழக்குகள், மோட்டார் விபத்து நிவாரணம், திருமண தகராறுகள் (விவாகரத்து வழக்குகள் தவிர), காசோலை பவுன்ஸ் வழக்குகள், தொழிலாளர் தகராறுகள் மற்றும் பிற சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதேபோல் நிதி நிறுவனங்கள், வங்கிகள், அரசு அமைப்புகள் மற்றும் தனியார் சேவை வழங்குநர்கள் தொடர்பான குறைதீர் வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டன. இதுகுறித்து உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகையில், ‘தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, டெல்லி, மணிப்பூர் தவிர நாடு முழுவதும் கடந்த 9ம் தேதி லோக் அதாலத் நடந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்ட சேவைகள் ஆணைய நிர்வாகத் தலைவருமான நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையில், இந்த ஆண்டின் மூன்றாவது தேசிய லோக் அதாலத் 35 மாநிலங்களில் நடந்தது. நிலுவையில் உள்ள 32.3 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. ெமாத்தம் 1.67 கோடிக்கும் அதிகமான வழக்குகளுக்கு லோக் அதாலத் மூலம் ரூ.1,223.9 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. லோக் அதாலத்தின் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் சுமையை எளிதாக்குவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

The post நாடு முழுவதும் 35 மாநிலங்களில் நடந்த தேசிய லோக் அதாலத் மூலம் 1.67 கோடி வழக்குகளுக்கு தீர்வு: உச்ச நீதிமன்றம் தகவல் appeared first on Dinakaran.

Tags : National Lok Adalat ,Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு