கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 11 நாட்கள் பயணமாக துபாய், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின், துபாய் ஆகிய நாடுகளுக்கு 11 நாள் அரசுமுறை பயணமாக சென்றார். இதுகுறித்து முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘முதல்வர் மம்தா பானர்ஜி அரசு முறை பயணமாக இன்று (செவ்வாய்கிழமை) துபாய்க்குப் புறப்பட்டு சென்றார். நாளை ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட் செல்கிறார். அங்கேயே மூன்று நாட்கள் தங்கியிருப்பார். அங்கு நடக்கும் வர்த்தக உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார். அங்கு வசிக்கும் வெளிநாட்டு பெங்காலிகளை சந்திக்கிறார்.
தொடர்ந்து பார்சிலோனாவுக்கு ரயிலில் செல்கிறார். அங்கு நடக்கும் பெங்கால் குளோபலுக்கான இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்கிறார். கடந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக முதல்வர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். முதல்வருடன் தலைமைச் செயலாளர் எச்.கே.திவேதி உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் செல்கின்றனர். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் ஒருசில நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். 11 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 23ம் தேதி முதல்வர் கொல்கத்தா திரும்புவார்’ என்றன.
The post மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 11 நாட்கள் பயணமாக துபாய், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் appeared first on Dinakaran.