×

டெப்போ எதிரே நிறுத்தி வைத்திருந்த அரசு பஸ்சை திருடி பயணிகளை ஏற்றிச்சென்ற பலே ஆசாமி: டீசல் தீர்ந்ததால் நடுவழியில் நிறுத்திவிட்டு எஸ்கேப்

திருமலை: அரசு பஸ்சை திருடி பயணிகளை ஏற்றிச்சென்ற கொள்ளையன், டீசல் தீர்ந்து போனதால் நடுவழியில் நிறுத்திவிட்டு தப்பியோடினார். அவரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சுவாமி என்பவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஆர்டிசி டெப்போ எதிரே உள்ள சாலையில் பஸ்சை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால் அப்போது சாவியை மறந்து ஸ்டீரியங்கில் வைத்து விட்டு சென்றுள்ளார். அன்று நள்ளிரவு அவ்வழியாக வந்த ஒரு மர்ம ஆசாமி, இந்த பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது சாவி இருப்பதை பார்த்த அவர், பஸ்சை ‘ஸ்டார்ட்’ செய்து ஓட்டிச்சென்றார். வெமுலவாடா பகுதியில் நள்ளிரவு ஐதராபாத் செல்வதற்காக பயணிகள் நின்றிருந்தனர்.

அவர்களை பார்த்த கொள்ளையன், இந்த பஸ் ஐதராபாத்துக்கு செல்வதாக கூறி 35 பயணிகளை ஏற்றிக்கொண்டார். பின்னர் அவர்களிடம் டிக்கெட்டுக்கான பணத்தை மட்டும் வசூலித்தார். இதற்கான டிக்கெட்டுகளை வழியில் கண்டக்டர் வந்து தருவார் எனக்கூறி விட்டு பஸ்சை தொடர்ந்து ஓட்டிச்சென்றார். சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்ற நிலையில் நேரல்லா என்ற இடத்திற்கு சென்றபோது திடீரென பஸ் நின்று விட்டது. அதை கொள்ளையன் சிறிது நேரம் போராடியும் ஸ்டார்ட் ஆகவில்லை. அப்போது டீசல் தீர்ந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் பயணிகளை இறக்கிய அந்த மர்ம ஆசாமி, நீங்கள் வேறு அரசு பஸ்சில் செல்லுங்கள் எனக்கூறிவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் அவர் மீது சந்தேகமடைந்த பயணிகள், தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். அப்போது, அவர், தான் பஸ் டிரைவர் கிடையாது.

இந்த பஸ்சை திருடி வந்தேன் எனக்கூறியுள்ளார். இதைக்கேட்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர், இதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். அப்போது அந்த ஆசாமி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் நேற்று காலை தான் நிறுத்திய இடத்தில் பஸ்சை காணாமல் அதிர்ச்சியடைந்த டிரைவர் சுவாமி, சித்திப்பேட்டை முதலாவது டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில் பஸ்சை கடத்தியது சிரிசில்லா மாவட்டம் கம்பீரப்பேட்டையைச் சேர்ந்த பந்தேல ராஜு(38) என தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தெலங்கானாவில் அரசு பஸ்சை திருடி பயணிகளை ஏற்றிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post டெப்போ எதிரே நிறுத்தி வைத்திருந்த அரசு பஸ்சை திருடி பயணிகளை ஏற்றிச்சென்ற பலே ஆசாமி: டீசல் தீர்ந்ததால் நடுவழியில் நிறுத்திவிட்டு எஸ்கேப் appeared first on Dinakaran.

Tags : palle asami ,Thirumalai ,Asami ,Dinakaran ,
× RELATED 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...