×

நிச்சய லாபம் தரும் நேந்திரம் சாகுபடி!

குமரி மாவட்டத்தில் தென்னை, ரப்பர் சாகுபடிக்கு அடுத்தபடியாக நெல், வாழை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குமரி மாவட்ட வாழை சாகுபடியில் நேந்திரம் (ஏத்தன்) வாழைக்கு முக்கிய இடம் உண்டு. சொல்லப்போனால் குமரியில் அதிகளவில் செய்யப்படுவது நேந்திரம் வாழைதான். இங்கு பயிரிடப்படும் நேந்திரம் வாழையில் இருந்து மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தை வியாபாரிகள் ஈட்டி வருகிறார்கள். குமரி மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கேரள வியாபாரிகள் நேரடியாக வந்து நேந்திரம் வாழைத்தார்களை கொள்முதல் செய்கிறார்கள். இதனால் நேந்திரம் வாழைக்கு நல்ல

வரவேற்பு கிடைத்து வருகிறது. கால நிலைகள் கைகொடுக்கவில்லை என்றால், வாழை வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்பது ஒரு பக்கம் உண்மைதான். இருந்தபோதும் அடுத்த சாகுபடியில் நஷ்டத்தை ஈடுகட்டிவிடலாம் என தொடர்ந்து வாழை சாகுபடியில் ஈடுபடுகிறார்கள் இங்குள்ள விவசாயிகள். அவர்களில் ஒருவர்தான் குமரி மாவட்டம் கடுக்கரையை சேர்ந்த பி.மகாராஜன். இவர் தொடர்ந்து தனது நிலத்தில் நேந்திரம் வாழையை சாகுபடி செய்து வருகிறார். அவரைச் சந்தித்தபோது நேந்திரம் வாழை சாகுபடியின் நெளிவு, சுளிவுகளை அடுக்க ஆரம்பித்தார்.

“ நான் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன். எனது தாத்தா, அப்பாவைத் தொடர்ந்து நானும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 35 வருடமாக விவசாயத்தொழிலில் இருக்கிறேன். குமரி மாவட்டத்தில் துவரங்காடு, கடுக்கரை, திடல், தெள்ளாந்தி, காட்டுப்புதூர், அழகியபாண்டிபுரம், தடிக்காரன்கோணம், சீதப்பால், சுருளோடு, தக்கலை என மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நேந்திரம் வாழை சாகுபடி அதிக அளவில் நடக்கிறது.
குமரி மாவட்டத்தின் நேந்திரம் பழம், பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது சிறியதாக இருக்கும். ஆனால் பழம் நல்ல ருசியாக இருக்கும். இதனால் இதைப் பலர் பழமாக சாப்பிடுவே விரும்புவார்கள். குமரி மாவட்டத்தில் விளையும் நேந்திரம் பெரும்பாலும் பழமாக பயன்படுத்தவே செல்கிறது.

நான் தற்போது 8 ஏக்கர் நிலப்பரப்பில் 12 ஆயிரம் நேந்திரம் வாழை சாகுபடி செய்திருக்கிறேன். இந்த நிலம் வேறு நபர்களுடையது. நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வருகிறேன். எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. தென்னைகளுக்கு இடையே ஊடுபயிராக பல ரக வாழைகளை சாகுபடி செய்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு வருடத்திற்கு ₹50 ஆயிரம் முதல் ₹60 ஆயிரம் வரை நிலத்தின் உரிமையாளருக்கு குத்தகையாக கொடுத்து வருகிறேன்.
நேந்திரம் வாழையைப் பொருத்தவரை 7அடி இடைவெளியில், அரை அடி அளவுள்ள குழியெடுத்து நடவு செய்வோம். நடவுக்கு முன்பு விதைக்கன்றை எக்கோலஸ் என்ற மருந்தில் நனைத்தெடுத்து நடுவோம். விதைக்கன்றை தரமானமாக தேர்ந்தெடுத்து வாங்குவோம். கன்று நட்ட ஒரு மாதத்தில் பாக்டம்பாஸ் அடி உரமாக போடுகிறேன். ஒரு ஏக்கருக்கு 2 மூடை செலவு ஆகும். அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் யூரியா, பொட்டாஷ், பாக்டம்பாஸ், சூப்பர் பாஸ்பேட் ஆகிய உரங்களைப் பயன்படுத்தி வருகிறேன். ஒரு ஏக்கர் நிலத்திற்கு நான்கரை மூடைகளை பயன்படுத்துவேன்.

உரம் போடும் நாளில் காலை, மாலையில் வாழைகளுக்கு தண்ணீர் விடுவேன். மற்ற நேரத்தில் 7 நாட்களில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுவேன். இதில் 15 நாட்களுக்கு ஒருமுறை களையெடுப்போம். 3 மாதத்திற்கு பிறகு மரங்கள் வளர்ந்து இலைகள் பெருகி நிழல் வரத்தொடங்கும். அப்போது களைகள் குறைய ஆரம்பிக்கும். நடவு செய்ததில் இருந்து 5வது மாதம் வாழையில் இருந்து தார் வெளியே வரும். அதில் இருந்து 90வது நாளில் குலைகளை அறுவடை செய்வோம். குமரி மாவட்டத்தில் உள்ள நேந்திரம் வாழைக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், விவசாய நிலத்திற்கே கேரள வியாபாரிகள் நேரடியாக வந்து வாழைத்தார்களை வாங்கிச்செல்கிறார்கள். நடவு செய்து அறுவடை வரை வேலை ஆட்களுக்கு கூலி, உரச்செலவு, குத்தகை செலவு, வாழையை தாங்கிப்பிடிக்க கட்டப்படும் கம்பு என ஒரு வாழை மரத்திற்கு மொத்தம் ரூ.170 வரை செலவு ஆகும். தற்போது குமரி மாவட்டத்தில் ஒரு கிலோ நேந்திரம் வாழையை ரூ.30 முதல் 50 வரை விலை வைத்து கொள்முதல் செய்கிறார்கள். சராசரியாக ஒரு கிலோ பழத்திற்கு ரூ.38 விலையாக கிடைக்கிறது. ஒரு தாரில் 3 கிலோ முதல் 15 கிலோ வரை பழங்கள் இருக்கும். சராசரியாக 8 கிலோ பழங்கள் கிடைக்கும்.

ஒரு தார் பழங்கள் மூலம் ரூ.304 வருமானமாக கிடைக்கும். இதில் செலவு போக ஒரு தாருக்கு ரூ.134 லாபமாக கிடைக்கும். 1200 தார்கள் மூலம் ரூ.1,60,800 லாபமாக கிடைக்கிறது. குமரி மாவட்டத்தில் வருடம்தோறும் வாழைத்தார்களின் அளவு சிறியதாக மாறி வருகிறது. கடந்த 10 வருடத்திற்கு முன்பு ஒரு நேந்திரம் வாழைத்தார் 10 கிலோ முதல் 15 கிலோ வரை இருக்கும். ஆனால் தற்போது வெட்டப்படும் தார் 7 கிலோ முதல் 10 கிலோ வரைதான் இருக்கிறது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை பெய்யாததால், நேந்திரம் வாழை மகசூல் குறைந்துள்ளது. 5 படலையுடன் (சீப்பு) வரும் வாழைத்தாரில் 3 படலை மட்டுமே வந்துள்ளது. இதனால் செலவு செய்த பணம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் அதிக மகசூல் கிடைக்க போராடி வருகிறேன். நேந்திரம் வாழை சாகுபடி செய்யும்போது காலநிலை நமக்கு ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்றார்.

தொடர்புக்கு:
பி.மகாராஜன்: 94876 06387.

ரூ.6 லட்சம் லாபம்

நேந்திரம் வாழை சாகுபடி செய்யும்போது லாபம், நஷ்டம் கிடைப்பது வழக்கம். கடந்த 2018ம் ஆண்டு ஓகி புயலின்போது நான் நடவு செய்து இருந்த சுமார் 12 ஆயிரம் நேந்திரம் வாழை அடியோடு முறிந்து விழுந்தது. இதில் எனக்கு ₹25 லட்சம் நஷ்டம் ஆனது. நிலம் எனக்கு சொந்தம் இல்லாததால் இழப்பீடு எனக்கு கிடைக்கவில்லை. நஷ்டம் அடைந்தாலும், தொடர்ந்து வாழை சாகுபடி செய்து வருகிறேன். கடந்த இரு வருடத்திற்கு முன்பு ஒரு கிலோ ₹40க்கு விற்கும்போது எனக்கு ₹6 லட்சம் லாபம் கிடைத்தது. கிலோ ₹15 முதல் 30 வரை வாழைத்தார் விற்கும்போது நாம் வாழைகளுக்கு செலவு செய்த பணம் கிடைக்காது என்கிறார் மகாராஜன்.

மதிப்புக்கூட்டுப்
பொருட்கள்

நேந்திரம் வாழைக்காயில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நேந்திரம் வாழைக்காய் சிப்ஸ் செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வாழைக்காய் சிப்ஸ் ₹250 முதல் ₹400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனைப் போன்று உப்பேறி என்னும் ஒரு வகை தின்பண்டமும் நேந்திரம் வாழைக்காயில் இருந்து செய்யப்பட்டு வருகிறது. நேந்திரம் வாழைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி, அதனை எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சர்க்கரைப் பாகில் போட்டு அதனை எடுத்து, அதன்மேல் சர்க்கரை தூவி காயவைத்து உப்பேறி தயாரிக்கப்படுகிறது. சிப்ஸ், உப்பேறி ஆகியவற்றை கேரள மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள்.

The post நிச்சய லாபம் தரும் நேந்திரம் சாகுபடி! appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Nendram ,Dinakaran ,
× RELATED பைக்கில் சென்று உரசி மாணவிகளிடம் சில்மிஷம்: வாலிபருக்கு தர்மஅடி