×

முத்துக்கடை- வாலாஜா சாலையில் நடக்கும் தொடர் விபத்துகளை தடுக்க மின் விளக்குகள் அமைக்க வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு

ராணிப்பேட்டை : முத்துக்கடை- வாலாஜா செல்லும் சாலையில் நடக்கும் தொடர் விபத்துகளை தடுக்க மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உரிய விசாரணை செய்து தீர்வு காண உத்தரவிட்டார்.

கூட்டத்தில் இந்து முன்னணி நகர பொது செயலாளர் சதீஷ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முத்துக்கடை- வாலாஜா செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராணிப்பேட்டை பஸ் நிலையம் எதிரே மிக குறுகலான சாலையில், சாலை தடுப்பு இருப்பதாலும் அந்த சாலை தடுப்புகள் இருப்பது தெரியாத அளவிற்கு இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. மின்விளக்குகளும் இல்லை. இதனால் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகின்றன. எனவே விபத்துகளை தடுக்க மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ராணிப்பேட்டை ஜெயராம் நகர் சேர்ந்த விக்னேஷ் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ராணிப்பேட்டை நகரத்தில் 11வது வார்டில் பிஞ்சி கிராமத்தில் பொது கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு பல நாட்கள் ஆன நிலையிலும் இந்நாள் வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பொது கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே 11வது வார்டில் உள்ள பொது கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

சோளிங்ர் தாலுகா வெங்குபட்டு ஊராட்சி கெங்காபுரம் சேர்ந்த சரவணன் மற்றும் கிராம பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே உள்ள கிராமம் நத்தம் இடத்தை தனிநபர் ஒருவருக்கு இரு காலி மனைகளாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி இது தவறாகும். வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கிராம ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் பட்டா வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பட்டாக்கள் தனிநபர் மூலமாக வேறொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விதிகள் மீறி வழங்கப்பட்ட இந்த பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அனந்தலை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 12 மாதங்களுக்கு முன்பாக அனந்தலை பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிளர்க் ஆகியோர் ஊழல் தொடர்பாக ஏற்கனவே புகார் மனுவை கொடுத்திருந்தோம்.

அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக எங்களுக்கு வாக்குறுதி அளித்த பிறகு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து டெப்டி ஜோனல் புஷ்பராஜ் எங்களிடம் இருந்த சாட்சியங்களை அவருக்கு நேரடியாக களத்தில் காண்பித்து நிருபித்தோம் மற்றும் அதற்கான சாட்சி அவரிடம் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

கூட்டத்தில் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, மின் இணைப்பு, குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு வேண்டி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். கூட்டத்தில் 318 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இதில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post முத்துக்கடை- வாலாஜா சாலையில் நடக்கும் தொடர் விபத்துகளை தடுக்க மின் விளக்குகள் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Muthukkada- Wallaja road ,Muthukkatta-Wallaja road ,Muthulkada-Wallaja Road ,
× RELATED மிக்ஜாம் புயலினால் பாதிக்கபட்டு...