×

மாற்றுச் சான்றிதழ் கேட்டு அகரம் அரசு தொடக்க பள்ளியில் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்

*ஆசிரியை பணியிடை மாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு

வில்லியனூர் : வில்லியனூர் அருகே உள்ள அகரம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அகரம், உளவாய்க்கால், கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம் உள்ளிட்ட கிராமப்பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி கடந்த காலங்களில் மாணவர்கள் சேர்க்கையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது 10 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அனிதா என்ற ஆசிரியை பணியிடை மாற்றம் பெற்று இப்பள்ளிக்கு வந்தார். அவர் வந்தவுடன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று தனியார் பள்ளிக்கு இணையாக இப்பள்ளியை பற்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் ஆண்டுதோறும் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கையை அதிகரித்தார். தற்போது அவரின் தீவிர முயற்சியினால் வட்டம் ஐந்துக்குட்பட்ட பள்ளிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு இப்பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தரமான சிபிஎஸ்இ கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள தனியார் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்கு முதன்மை காரணமாக ஆசிரியை அனிதா தான் காரணம் என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கல்வித்துறை மூலம் ஒரு பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.

அப்போது அகரம் பள்ளியில் உள்ள ஆசிரியை அனிதா முத்தியால்பேட்டை அரசு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஆசிரியையை பணியிடை மாற்றம் செய்யக்கூடாது, இவர் இருப்பதால் தான் தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்த்ேதாம் என கூறி பெற்றொர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வில்லியனூரில் உள்ள கல்வித்துறையின் வட்டம் ஐந்து அலுவலகத்தில் மனு அளித்தனர். அதற்கு கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர்களையும், அவர்கள் கொடுத்த மனுவையும் மதிக்காமல் விரட்டியடித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி வாயிலில் நின்று போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியை அனிதாவை பணியிடை மாற்றம் செய்தால் தங்கள் பிள்ளைகளுக்கு மாற்று சான்றிதழ் கொடுங்கள் நாங்கள் வேறு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக்கொள்கிறோம்.

மேலும் நன்றாக சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களை ஏன் பணியிடை மாற்றம் செய்கிறீர்கள். இப்போது இந்த ஆசிரியை நன்றாரக சொல்லிக்கொடுப்பதால் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள் என்று கூறினர். இதற்கு அதிகாரிகள் உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதுவரை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

The post மாற்றுச் சான்றிதழ் கேட்டு அகரம் அரசு தொடக்க பள்ளியில் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Akaram Government Elementary School ,Villianur ,Agaram ,Agaram Government Elementary School ,Dinakaran ,
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை