
* நீதிமன்ற உத்தரவு அமலானது * பேரிகார்டுகள் வைத்து சாலை அடைப்பு
புதுச்சேரி : சென்னை உயர்நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி நேருவீதி- காந்திவீதியில் மீன் ஏலம் விடுவதற்கு தடை விதிக்கப்பட்டு எஸ்பி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. புதுச்சேரி நேருவீதியில் பெரிய மார்க்கெட் உள்ளே மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. அதன் வெளிப்பகுதியான நேருவீதி, காந்தி வீதி சந்திப்பில் வெளியூர்களில் இருந்து லாரிகளில் வரும் மீன்கள் காலை நேரத்தில் ஏலம் விடப்படுகிறது. இதற்கு தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் அங்கேயே தொடர்ந்து ஏலம் விடப்பட்டு வந்தன.
இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேருவீதியில் நடைபெறும் மீன்கள் ஏலத்தை இசிஆரில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்ற போலீசுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மீன் வியாபாரம் செய்யும் குருசுக்குப்பம், வைத்திக்குப்பம், வம்பாகீரப்பாளையம் மீனவர்களுடன் சீனியர் எஸ்பி நாரா.சைதன்யா கடந்த 2ம்தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களை நவீன மீன்அங்காடிக்கு அழைத்து சென்று குறைகளை கேட்டறிந்ததோடு, இடமாறுதலை கண்டிப்பாக கடைபிடிக்கவும் உத்தரவிட்டார்.
அதன்படி செப்.11ம் தேதி (நேற்று)முதல் நவீன மீன் அங்காடியில் மொத்த மீன்களை ஏலம் விடுவதற்கு மீனவர்கள் தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் நேற்று அதிகாலை 2 மணி முதல் பெரிய மீன்மார்க்கெட் அமைந்துள்ள நேருவீதி- காந்தி வீதி சந்திப்பில் கிழக்கு எஸ்பி சுவாதிசிங் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ் (பெரியகடை), தனசெல்வம் (முத்தியால்பேட்டை), கீர்த்திவர்மன் (போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்பகுதியில் பேரிகார்டுகள் அமைத்து மொத்த மீன்களை எடுத்து வரும் வாகனங்கள் பெரிய மீன்மார்க்கெட் அருகே வர முடியாதபடி தடுத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும்பாலான மொத்த மீன் வியாபாரிகள் வரவில்லை. ஒருசிலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாற்று இடமான லாஸ்பேட்டை மீன் அங்காடிக்கு சென்று மீன்களை ஏலம் விட்டனர். ஒரு சிலர் மீன்களை நேருவீதி மற்றும் காந்தி வீதியை ஒட்டியுள்ள வீதிகளில் மறைவான இடத்திற்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
புதுச்சேரியில் 10க்கும் மேற்பட்ட மொத்த மீன் வியாபாரிகள் உள்ள நிலையில், தங்களைப் போன்று வெளிமாநில மொத்த மீன் வியாபாரத்தையும் காந்திவீதி, நேருவீதியில் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர். மேலும் நவீன மீன் அங்காடியில் தங்களுக்கு தேவையான வசதிகளை, கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தினர். நேரு- வீதி முதல் காந்தி வீதிக்கு இடைப்பட்ட பகுதிகள் பேரிகார்டுகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. அங்கு விரைவில் சாலை அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபடவுள்ளது.
The post புதுச்சேரி நேரு வீதி – காந்தி வீதி சந்திப்பில் மீன் ஏலத்துக்கு மீண்டும் தடை appeared first on Dinakaran.