×

போடி மீனாட்சிபுரம் பகுதியில் 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் செட்டிகுளம், பாவிச்சம் குளம்

*விவசாயத்திற்கு நீர் தேக்கி வைக்க வலியுறுத்தல்

*கால்வாய் பாதைகளை மீட்டெடுக்க வேண்டும்

போடி : போடி மீனாட்சிபுரம் பகுதியில் 50 ஆண்டுகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி கிடக்கும் செட் டிகுளம், பாவிச்சம் குளங்களை அதிகாரிகள் மீட்டெடுத்து தண்ணீரை தேக்கி விவசாயத்தை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சி பகுதியில், பொட்டல்களம், துரைராஜபுரம் காலனி என கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாய சாகுபடி, விவசாய கூலி தொழிலாளர்கள், கண்மாய்களில் மீன் வளர்ப்பு என தொழிலாக உள்ளது. மீனாட்சிபுரத்தை சுற்றி கண்ணுக்கு எட்டும் தூரம் தாண்டியும் பார்த்தாலும் விவசாய நிலங்களாகவும், கிணறுகளாகவும், காணி நிலங்களும், மாட்டு வண்டிகள், ஏர் கலப்பைகள், தொழிலாளர்கள் என தான் கண்களுக்கு தெரியும்.

இத்தகைய செழுமையான விவசாயத்திற்கு அத்தியாவசிய ஆணிவேராக தேவைப்படும் பாசன நீருக்காக 80 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சிபுரம் பொட்டல்களம் சாலையில் செட்டிகுளம், பாவிச்சம் குளம் உருவாக்கப்பட்டது. விவசாய பயிர்களும் செழித்து வளர்வதற்கான முன்னோட்டமாக மீனாட்சிபுரத்திற்குள் போடி அம்மாபட்டி கிராம ஊராட்சி எல்லையில் மீனாட்சியம்மன் கண்மாய் 200 ஏக்கரி லும், பொட்டல்களம் சாலையில் செட்டிகுளம் கண்மாய் 80 ஏக்கரிலும், பாப்புராஜ்குளம் 25 ஏக்கரிலும் ஊர் பொதுமக்களின் நன்கொடை பங்க ளிப்போடு உருவாக்கப்பட்டுள்ளது.

அம்மாபட்டி கிராம ஊராட்சியில் கட்டுப்பட்டுள்ள மீனாட்சியம்மன் கண்மாய், மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு கட்டுப்பட்டுள்ள செட்டிகுளம் கண்மாய் பொதுப்பணி துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது. மீனாட்சியம்மன் கண்மாய் சுற்றியுள்ள 50 ஆயிரம் நிலங்களுக்கும், செட்டிகுளம் கண்மாய் சுற்றி 500 ஏக்கருக்கு மேல் நிலங்களுக்கு பாசன நீர் கிடைக்கிறது. இந்த குளங்களுக்கு போடி குரங்கணி மலைப்பகுதிகளிலிந்து வரும் புகழ்பெற்ற கொட்டகுடி ஆற்றி லிருந்து பெரிய வாய்க்கால்களின் வாயிலாக ஷெட்டர் மூலமாக திறந்து விடப்படும் தண்ணீர் தேங்கி வருடத்தில் 8 முதல் 10 மாதம் வரை நிரம்பி நிற்கும். குளங்களில் நீர் தேங்கி பெருகுவதால் சுமார் 500க்கும் மேற்பட்ட கிணறுகளில் ஊற்றெடுக்கிறது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நீரும், கொட்டகுடி ஆற்று நீரும் குளங்களில் சென்று சேர்வதால் குளம் முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும். ஓடுபாதைகளாக இருக்கும் பெரிய வாய்க்கால்களிலும் பல இடங்களில் ஆக்கிரமிப்பு இருப்பதால் வேகமாக செல்லும் பாசனநீர் தடையோடு கடக்கிறது.இப்பகுதி விவசாயிகள் தொய்வின்றி தொடர்ந்து வேறு மாற்று வழி இன்றி சாகுபடி செய்து பயிர்களை வளர்த்து காத்து விவசாயத்தை செய்து வருகின்றனர்.

அப்படி தென்னை தோப்புகளும், ஒரு போகம் நெல் சாகுபடியும், காய்கறிகள், மக்காச்சோளம், சோளம் கேழ்வரகு, தக்காளி, ஆலைக்கரும்பு என பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். செட்டிகுளத்தில் சுமார் 50 ஏக்கருக்கு மேலாக வடக்கு மற்றும் மேற்கு திசை பகுதியில் கடந்த 50 ஆண்டுக்கு மேலாக குளங்களை ஆக்கிரமித்து தென்னந்தோப்புகளாகவும், வயல்வெளிகளாகவும் மாறியுள்ளன. இதனால் செட்டிகுளம், பாவிச்சம் குளங்களின் இருபுறங்களிலும் நிலம் சுருங்கி விட்டதால் மழை நீரையும், கொட்டகுடி ஆற்று நீரையும் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிலப்பரப்புகள் சுருங்கி குறைந் திப்பதால் குறைந்த அளவு தண்ணீரையும் அறைகுறையாக தேங்குவ தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 25 ஏக்கர் பாவிச்சம் குளத்திலும் 15 ஏக்கர் ஆக்கிரமித்து வேறு நிலங்களுடன் இருப்பதால் மழைநீர் தேக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.இதுகுறித்து விவசாயிகளும் பொதுமக்களும் கண்மாய் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நான்கு புறமும் கரைகள் மேம்படுத்தி தூர்வாரப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சியில் புகார் அளித்து நடவடிக்கையும் இல்லையென சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.

நீர் நிலைகளான குளம் , கண்மாய்களில் ஆக்கிரப்புகளை மீட்டெடுத்து அகற்றி நடவடிக்கை எடுப்பதற்கு முன்னுரிமை தரும் திமுக அரசு இந்த மேற்படி இரு குளங்களையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சர்வே செய்து அத்துமீறியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொட்டல்களம் விவசாயி பால்பாண்டி கூறுகையில், ‘‘செட்டிகுளம் ஆக்கிரமிப்பால் கொட்டகுடி ஆறு நீர் மற்றும் மழை நீரை தேக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குளத்தில் பாசனநீர் வெளி வரும் இரண்டு ஷெட்டர்களில் ஒன்றை அடைத்து விட்டதால் பாசனநீர் கிடைக்காமலேயே சுமார் 100 ஏக்கருக்கு மேலாக தரிசாகவே கிடக்கிறது. கிணறுகள் எல்லாம் நிலத்தடி நீர் ஊற்றெடுக்காமல் காத்து வாங்குகிறது.

மொட்டை கிணறாக மாறி விட்டதால் எவ்வித பயிரும் சாகுபடி செய்ய முடியாமல் பலரும் பாதிக்கப்பட்டு கிடக்கிறோம்’’என்றார்.மீனாட்சிபுரம் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சிவக்குமார் கூறுகையில், ‘‘விவசாயம் சார்ந்த மீனாட்சிபுரம் பகுதியில் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை அகற்றி அந்தந்த பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசன நீர் கிடைக்க முறையாக நடவடிக்கை எடுத்து தடையின்றி பயிர் சாகுபடி செய்ய வழிவகை செய்ய வேண்டும்’’ என்றார்.

The post போடி மீனாட்சிபுரம் பகுதியில் 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் செட்டிகுளம், பாவிச்சம் குளம் appeared first on Dinakaran.

Tags : Chettikulam ,Bhavicham ,Bodi Meenakshipuram ,Bodi ,Meenakshipuram ,
× RELATED செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோமம்