×

இசை நிகழ்ச்சி குளறுபடி எதிரொலி!: 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நடவடிக்கை..!!

சென்னை: இசை நிகழ்ச்சி குளறுபடி தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் திசா மிட்டல் மற்றும் தீபா சத்யன் ஆகியோர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் சென்னையில் ஆகஸ்ட் 12ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். அன்று மழை பெய்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. புதிய தேதி செப்டம்பர் 10 என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை பனையூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

இதற்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதையும் தாண்டி நிகழ்ச்சி நடந்த இடத்துக்குச் சென்ற ரசிகர்கள், பாதியிலேயே திரும்பிச் சென்றுள்ளனர். இசை நிகழ்ச்சியின் போது டிக்கெட் வைத்திருந்த பலருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் குளறுபடி ஏற்பட்டது. இசை நிகழ்ச்சியில் நடந்த இடத்தில் ஏற்பட்ட குளறுபடியை தொடர்ந்து அந்த பகுதி முழுவதுமே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

அதன்பேரில், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில், சட்டம் – ஒழுங்கு இணை ஆணையர் மூர்த்தி, பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் ஆகியோர் பனையூரில் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் நேற்று ஆய்வு நடத்தி, அறிக்கையை டிஜிபிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் திசா மிட்டல் மற்றும் தீபா சத்யன் ஆகியோர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்ச்சி குளறுபடி, போக்குவரத்து பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளறுபடியை அடுத்து பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையர் திசா மிட்டல் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

The post இசை நிகழ்ச்சி குளறுபடி எதிரொலி!: 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,IPS ,Disa Mittal ,Deepa Sathyan ,Dinakaran ,
× RELATED அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல்...