×

புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி

*தர்மபுரி கலெக்டர் ஆபிசில் பரபரப்பு

தர்மபுரி : தர்மபுரி அருகே புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே தாளநத்தம் டி.அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனு (52), காய்கறி வியாபாரி. இவரது மனைவி வேணி(40), 2 மகள்கள் மற்றும் தாயார் கிருஷ்ணம்மாள்(70) கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் வந்த 4 பேரும், திடீரென தலையில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, தண்ணீர் ஊற்றி சமாதானம் செய்தனர். பின்னர், அதிகாரிகளிடம் மனு அளிக்க வைத்தனர்.

இதுகுறித்து சீனுவின் மனைவி வேணி கூறுகையில், ‘எங்களுக்கு பூர்வீக சொத்தான 1.40 ஏக்கர் நிலத்தை, எங்களது உறவினர்கள் சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்று வருகின்றனர்.

நிலத்தில் இருந்த தென்னை மரம், விலை உயர்ந்த மரங்களை வெட்டி அகற்றுகின்றனர். இது தொடர்பாக கடத்தூர் ேபாலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் உரிய விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.
இதனை தொடர்ந்து, தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினரை, போலீசார் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

The post புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Darmapuri Collector's Office Stir ,Darmapuri ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...