×

குழாய்களில் அடிக்கடி உடைப்பு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

*ஒரு மாதமாக 4 கிராமங்கள் தவிப்பு

நாகப்பட்டினம் : திருமருகலில், கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக சாலையில் செல்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கொள்ளிடத்தில் ராட்சத குழாய்கள் போடப்பட்டு அங்கிருந்து பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு மயிலாடுதுறையில் இருந்து குழாய் மூலம் வரும் தண்ணீர் திருமருகல், திட்டச்சேரி, நாகூர் என பல்வேறு இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் தரைமட்ட தோட்டிகளில் சேகரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட ராட்சத குழாய் மூலமாக திட்டச்சேரி, நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யம் வரை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்படும் குடிநீர் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் தேரடி அருகில் 2 இடங்களிலும் தெற்கு வீதியில் 1 இடத்திலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இதனால் குடிநீர் வீணாக செல்வதுடன், வாகனங்கள் அடிக்கடி செல்வதால் சாலைகளும் சேதம் அடைகிறது. இரண்டு சக்கர வாகனத்தில் வருவோர்கள் இந்த நீரில் வழுக்கி கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலையும் உள்ளது.

குடிநீர் வீணாக செல்வது குறித்து வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் போதுமான பணியாளர்கள் இல்லை என கூறி குழாய் உடைப்பை சரி செய்ய வரவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது. இரவு நேரங்களில் அதிக அழுத்தம் காரணமாக உடைப்பு பகுதியில் இருந்து தண்ணீர் அதிகளவு வெளியேறுகிறது. எனவே குழாய் உடைப்பை சரிய செய்ய அதிகாரிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து திருமருகல் பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக இடங்களில் உப்பு நீர் இருப்பதால் அதை தினந்தோறும் குளிப்பதற்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி குடிக்க முடியும். இந்நிலையில் கொள்ளிடத்தில் இருந்து குடிநீர் எடுத்து வர பூமிக்கு அடியில் ராட்சத குழாய்கள் பதித்து தேவையான இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டியும் குடிநீர் விநியோகம் செய்கின்றனர்.

இந்த மிகபெரிய திட்டத்தால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைசி பகுதியான வேதாரண்யம் வரை குடிநீர் செல்கிறது. ஆனால் திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அரசு துறையின் சில துறைகள் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டும் போது குடிநீர் குழாயை சேதம் செய்து விடுகின்றனர். அவ்வாறு குடிநீர் குழாய் சேதம் குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் தெரிவிப்பது இல்லை. இதனால் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது.

இதுகுறித்த குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் வந்து குழாய் சேதம் குறித்து கண்டறிந்து அதை சரி செய்ய பல மாதங்கள் ஆகிவிடுகிறது. திருமருகல் பகுதியில் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மருங்கூர், நெய்குப்பை, வேளங்குடி, கண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
வீணாகும் குடிநீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிநீர் குழாய் உடைப்பு குறித்து தகவல் தெரிவிக்க பொதுவான எண்ணை அறிமுகம் செய்ய வேண்டும். இந்த பொதுவான எண்களில் புகார் பதிவு செய்யும் போது உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை வரை உள்ள அதிகாரிகள் கவனத்திற்கு செல்லும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். அதே நேரத்தில் எதிர்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post குழாய்களில் அடிக்கடி உடைப்பு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண் appeared first on Dinakaran.

Tags : Thirumurugal ,
× RELATED திருமருகல் ஊராட்சியில் பயிர் சேத கணக்கெடுக்கும் பணி