×

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாணவர்களுடன் மலைக்குறவர்கள் தர்ணா

*ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் பகுதியை சேர்ந்த மலைக்குறவர்கள், மாணவ, மாணவிகளுடன் வந்து குறை கேட்பு கூட்ட அரங்கம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் கடந்த 35 வருடங்களாக ராமநத்தம் கிராம மக்கள் குப்பை கொட்டும் இடத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம். இயற்கை பேரிடர் காலத்தில் நாங்கள் இருப்பதற்கு இருப்பிடம் இல்லை. கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடலூர் மாவட்ட ஆட்சியர், விருத்தாசலம் சார் ஆட்சியர், திட்டக்குடி வட்டாட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் பழங்குடி வகுப்பான இந்து மலைக்குறவன் வகுப்பை சேர்ந்தவர்கள்.

நாங்கள் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதைக் கேட்ட போலீசார் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.

The post இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாணவர்களுடன் மலைக்குறவர்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Free Home Land Batta ,Ruler's Office ,Cuddalore ,People's Crossing Meeting ,Tarna ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்