×

சாதிய கொடுமை புகாருக்குள்ளான பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன்..!!

தூத்துக்குடி: சாதிய கொடுமை புகாருக்குள்ளான பள்ளியில் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அரசுப் பள்ளியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் உணவு சமைக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பள்ளி மாணவர்களோடு திமுக எம்.பி. கனிமொழி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் காலை உணவு சாப்பிட்டனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ளது உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. அங்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் உணவு சமைத்த காரணத்தினால் அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மட்டுமின்றி காலை உணவு திட்டத்தில் தங்களது பிள்ளைகள் சாப்பிடவும் அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், ஊராட்சித்துறையினர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பெற்றோர்கள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் கீதா ஜீவன், பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடிவிட்டு, பின்னர் மாணவர்களுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்டனர். இதுகுறித்து கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தூத்துக்குடி – உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் சமையலராகப் பணிபுரிந்துவரும் முனிய செல்வி அவர்களைச் சந்தித்தோம். மனவுறுதியுடன் தனது பணியைத் திறம்படச் செய்துவரும் அவருக்கு எனது வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

The post சாதிய கொடுமை புகாருக்குள்ளான பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன்..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Kanimozhi ,Minister ,Geeta Jeevan ,Geetha Jeevan ,
× RELATED இன்று மாலையுடன் முடிவுக்கு வரும்...