×

மா பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறலாம்

கிருஷ்ணகிரி, செப்.12: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தில், மா சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக மா விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இம்மாவட்டத்தில் சுமார் 45 ஆயிரம் எக்டேர் பரப்பளவிற்கு மா சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இங்கு விளையும் மாங்கனிகள் சுவையாக உள்ளதால், வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதுடன், அமெரிக்கா, ஜப்பான் உள்பட பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இம்மாவட்டத்தில் விளையும் தோத்தாபுரி எனும் பெங்களூரா வகை மாம்பழத்தில் இருந்தும், அல்போன்சா வகை மாம்பழத்தில் இருந்தும் மாங்கூழ் தயாரிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 மாங்கூழ் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. இவற்றில் தயாராகும் மாங்கூழ் 62 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதியில் 75 சதவீதம் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, குவைத், ஏமன் போன்ற நாடுகளுக்கும், 10 சதவீதம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் மா உற்பத்தியில் முதலிடம் வகித்து வந்த இம்மாவட்டத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, மா உற்பத்தி இவ்வாண்டு வெகுவாக குறைந்தால் விவசாயிகள் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். பருவநிலை மாற்றம், வறட்சி, மழையின்மை போன்ற காரணங்களால் மாமரங்கள் பட்டுப்போனது. இதனால், தற்போது மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சத்து 32 ஆயிரம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனிடையே, மா விவசாயத்தை காக்கும் வகையில் பழைய மாந்தோட்டங்களை புதுப்பித்து, புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மா காய்ப்பு திறன் அதிகரிக்க, விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கவும், தோட்டக்கலைத்துறை நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், தோட்டக்கலைத்துறை சார்பில் வட்டார வாரியாக பயிற்சி வழங்க, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம், எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை விஞ்ஞானிகள் மூலம், பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் கடந்த 4ம் தேதி பர்கூர் வட்டாரத்திலும், 7ம் தேதி மத்தூர் வட்டாரத்திலும், 8ம் தேதி காவேரிப்பட்டணம் வட்டாரத்திலும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (12ம் தேதி) கிருஷ்ணகிரி வட்டாரத்திலும், நாளை (13ம் தேதி) வேப்பனஹள்ளி வட்டாரத்திலும், 14ம் தேதி ஊத்தங்கரை வட்டாரத்திலும் பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கலெக்டர் சரயு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 35 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மா பயிரில் காலநிலை மாற்றங்களாலும், அதிக பூச்சி மற்றும் நோய் தாக்குதலாலும், மகசூல் இழப்பீடு ஏற்படுவதாக விவசாயிகளிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திலும், மா பயிருக்கு மகசூல் இழப்பினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம், மா பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். எனவே, மா விவசாயிகள் கோரிக்கைக்கு இணங்க, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், 2023-24ம் ஆண்டிற்கு மாவிற்கு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பரிந்துரை செய்துள்ளார்.

The post மா பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறலாம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,
× RELATED மாவட்டத்தில் பரவலாக மழை