×

வண்ண ஓவியங்களால் புதுப்பொலிவு பெறும் பாட்டவயல் அரசு பள்ளி

 

பந்தலூர்,செப்.12: நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா, நெலாக்கோட்டை அடுத்து பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியை பூபதி பள்ளி வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறார். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு கோவையில் உள்ள தூரிகை அறக்கட்டளை மூலம் கடந்த மாதம் நோட்டு நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்களை மாணவர்களுக்கு பெற்று தந்துள்ளார்.

மேலும் குழந்தைகள் பாராளுமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களின் திறன்களை ஊக்குவித்தார் . தூரிகை அறக்கட்டளை நிர்வாகிகளான ரஞ்சித்குமார் மற்றும் சினேகா தம்பதியரின் ஏற்பாட்டின் பேரில் பள்ளி கட்டிடங்கள் முழுதும் உள்ளேயும்,வெளியேயும் வண்ண வண்ண ஓவியங்கள் வரைந்து பள்ளி கட்டிடங்களை புதுப்பொலிவு பெற செய்துள்ளனர்.பெற்றோர்கள்,அப்பகுதி கவுன்சிலர் அசரப் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பள்ளி நிர்வாகத்துடன் சேர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பணிகளிலும் கவனம் செலுத்தி வருவதாக தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, ரஜினிபாஸ்கர், ஷீபா, மரியம், கோவிந்தராஜ், ஆனந்தகுமார்,ரமா ஆகியோர் தெரிவித்தனர். மேலும் தங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் கோவை தூரிகை அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

The post வண்ண ஓவியங்களால் புதுப்பொலிவு பெறும் பாட்டவயல் அரசு பள்ளி appeared first on Dinakaran.

Tags : Patavayal Govt School ,Bandalur ,Pattavayal Panchayat Union Middle School ,Nelakottai, Bandalur Taluk, Nilgiri District ,
× RELATED தேவாலாவில் கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பாதிப்பு