×

திருத்துறைப்பூண்டி அரசுப் பள்ளி முன்பு மரக்கன்றுகள் நடவு செய்ய கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, செப். 12: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வெளிப் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு கண்ட பாரம்பரியமிக்கது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 40 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திலிருந்து மாணவர்கள் படித்து வந்தனர். இப்பள்ளியில் பயின்ற பலர் இந்திய ஆட்சிப்பணியிலும், அரசு உயர் பதவிகளிலும், புகழ்பெற்ற மருத்துவர்களாகவும், அரசு உயர் அதிகாரிகளாகவும், அரசியல்வாதிகளாகவும் இருந்து வருகின்றனர்.

பழமையான திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி கட்டிடம் பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி கம்பீரமாக நிற்கிறது. காலப்போக்கில் ஆங்காங்கே பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர் எண்ணிக்கை குறைந்தது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அலுவலகம், வட்டார வளமையம், மாணவர் விடுதி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளி சுற்றுச்சுவர் வெளிப் பகுதியில் போதிய இடம் உள்ளது. இங்கு மரக்கன்றுகள் நட்டு பராமரித்தால் பசுமை சூழல் மேம்படுவதோடு, பள்ளிக்கு அழகு சேர்க்கவும் உதவும். எனவே மரக்கன்றுகளை நட, பள்ளிக்கல்வி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருத்துறைப்பூண்டி அரசுப் பள்ளி முன்பு மரக்கன்றுகள் நடவு செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi Government School ,Thirutharapoondi ,Thiruthurapoondi Government Boys High School ,Thiruthurapoondi Government School ,
× RELATED மீன் வளர்ப்புக்கு அரசு காப்பீட்டு திட்டம் வேண்டும்