சென்னை: மோடி அரசே வெளியேறு என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று முதல் தொடர் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என்று முத்தரசன் அறிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு உள்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர் மாளிகை வழியாக போட்டி அரசு நடத்தி வருவதை இனியும் அனுமதிக்க இயலாது என்ற மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் முறையில் ‘மோடி அரசே வெளியேறு’ என்ற முழக்கத்தை முன்வைத்து இன்று (12ம்தேதி) முதல் தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறது. சென்னையில் வட சென்னை, பீச் ரயில் நிலையம் அருகில் உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் கட்சியின் மாநில செயலாளராகிய நானும், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியனும் பங்கேற்கிறோம். இதேபோன்று திருப்பூர், திருவாரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கோவை ஆகிய மாவட்டங்களிலும் நடக்கிறது. இந்த தொடர் மறியல் போராட்டத்தை தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாணவர், இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் ஆதரித்து பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன்.
The post மோடி அரசே வெளியேறு என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.