×

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்து பணத்தை ஏமாற்றி விட்டனர்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கவுதமி பரபரப்பு புகார்

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது, எனது சொத்துகளுக்கு பவர் ஏஜென்டாக இருந்த அழகப்பன் ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் பணத்தை ஏமாற்றி விட்டதாகவும், அவரிடம் இருந்து சொத்து மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் நடிகை கவுதமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரியிடம் நேற்று நடிகை கவுதமி அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் எனது நடிப்பின் மூலம் 17 வயது முதல் சம்பாதித்த பணத்தில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் அசையா சொத்துகள் வாங்கி வைத்துள்ளேன். கடந்த 2004ம் ஆண்டு எனக்கு புற்றுநோய் ஏற்பட்ட காரணத்தால் எனது 4 வயது மகளின் எதிர்காலத்திற்காக அனைத்து சொத்துகளையும் விற்பனை செய்ய அழகப்பன் என்பவரை பவர் ஏஜென்ட்டாக நியமித்தேன். ஆனால் அவர், அவரது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா அழகப்பன் (எ) சதீஷ், மகள் ஆர்த்தி அழகப்பன் மற்றும் உறவினர்களான பாஸ்கர், ரமேஷ் சங்கர் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கடந்த 2015-16ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 10.63 ஏக்கர் விவசாய நிலத்தை, ரூ.4.10 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் அவர் எனது வங்கி கணக்கில் ரூ.58 லட்சம் மற்றும் ரூ.4.20 லட்சம் மட்டும் வரவு வைத்துள்ளார். மீதமுள்ள பணத்தை அழகப்பன் அவரது குடும்ப உறுப்பினர் பெயர்களில் உள்ள வங்கி கணக்கில் மாற்றிவிட்டார்.

அதேபோல், ராமநாதபுரத்தில் உள்ள எனக்கு சொந்தமான 8.23 ஏக்கர் நிலத்தை அழகப்பன் தனது மகன் சிவா அழகப்பன், மகள் ஆர்த்தி அழகப்பன் பெயரில் பதிவு செய்து விற்பனை ஆவணத்தை மாற்றி எனது சொத்துகளை ஏமாற்றி பறித்துக்கொண்டார். அந்த வகையில் ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் பணத்தை ஏமாற்றிய அழகப்பன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்து சொத்துகளையும், அசல் ஆவணத்தையும் பணத்தையும் மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். நடிகை கவுதமி அளித்த புகாரின் மீது விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு மோசடி தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை கவுதமியின் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்து பணத்தை ஏமாற்றி விட்டனர்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கவுதமி பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : Kautami Shraddam ,Chennai ,Behagappan ,Gautami Stir ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...