திருவள்ளூர்: சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேறும் வரை மாநில அமைப்புடன் இணைந்து போராட வேண்டும் என்று இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திருவள்ளூரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட கிளை மற்றும் 10 புதிய வட்டாரக் கிளைகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாநிலத் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட தலைவர் குமரேசன், மாவட்டச் செயலாளர் ராஜேஷ் குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
இந்தவிழாவில் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தி பேசினார். இதில் மாநில துணைத் தலைவர் ஞானசேகரன், மாநில துணைச் செயலாளர் வேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் நாகலிங்கம், லட்சுமி நரசிம்மன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரமேஷ், தனசேகர், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர்கள் சுஜாதா, பாரதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள், 10 வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் குகன் நன்றி தெரிவித்தார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ராஜேஷ் குமார் செய்திருந்தார்.
இந்த விழாவில் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் பேசியதாவது: கடந்த 1.6.2009க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 எனவும் 1.6.2009க்கு பின்பு ரூ.5,200 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை எந்த ஒரு ஊதியக்குழுவிலும் ‘ஒரே பதவி – ஒரே கல்வித் தகுதி – ஒரே பணி’ என்று அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தும் இரு வேறு ஊதியங்கள் நிர்ணயித்ததில்லை. இந்தியாவிலேயே தூய்மை பணியாளர்களின் அடிப்படை ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக கல்வி தரத்திற்கு அடித்தளமாக விளங்கும் இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் வரும் 2வது பருவ விடுமுறையில் சென்னையில் நடைபெறவுள்ள காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேறும் வரை உறுதியாக மாநில அமைப்புடன் இணைந்து போராட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post சம வேலைக்கு சம ஊதியம்: ஆசிரியர்கள் இயக்கம் கோரிக்கை appeared first on Dinakaran.