புழல்: புழல் அருகே டீச்சர்ஸ் காலனி, முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜோஸ்வா (20). இவர், மதுரவாயலில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு புழல் அருகே சைக்கிள் ஷாப் பகுதியில் தனது நண்பருக்காக இவர் பைக்குடன் காத்திருந்தார். அப்போது அவ்வழியே 2 பைக்குகளில் வந்த 5 மர்ம நபர்கள், ஜோஸ்வாவிடம் முகவரி விசாரிப்பது போல் பேச்சு கொடுத்து, அவரது பைக்கை பறிக்க முயற்சித்தனர். அவர் தர மறுக்கவே, 5 பேரும் சேர்ந்து, கத்தியால் சரமாரியாக அவரை தலையில் வெட்டிவிட்டு பைக்கில் தப்பி சென்றனர்.
புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் பைக் பதிவெண்ணை வைத்து விசாரித்தனர். அதில், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பவன்குமார் (21), மாதவரம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த வர்ஷன் (22), புத்தாகரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (எ) சந்துரு (23), கோகுல் (21), சரண் (19) என்பது தெரியவந்தது. அவர்களை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post பைக்கை பறிக்க முயன்றபோது தடுத்ததால் மாணவனை சரமாரியாக வெட்டிய 5 பேர் கைது appeared first on Dinakaran.