×

ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்ட சமுதாய மக்களை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார். அவரை மீண்டும் அக்டோபர் 10ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து ஈரோடு திருநகர் காலனி பகுதியில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும், பிற மாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும் கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி எஸ்சி, எஸ்டி வன் கொடுமை தடுப்பு சட்டம், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிந்தனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில், சீமான் நேற்று காலை ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், ஈரோடு மகிளா நீதிமன்ற எஸ்சி, எஸ்டி பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு மனு அளித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை மதியத்திற்கு மேல் நீதிபதி ஒத்திவைத்தார். தொடர்ந்து மதியம் 2.30 மணியளவில் மீண்டும் நீதிபதி மாலதி முன் சீமான் ஆஜரானார். அப்போது புகார்தாரரான பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் ஆஜராகாததால் சீமான் தரப்பில் அளித்த ஜாமீன் மனுக்கான பிணை உத்தரவாத மனுவை நீதிபதி பெற்றுக்கொண்டார். இதையடுத்து நீதிபதி மீண்டும் வருகிற அக்டோபர் 10ம் தேதி ஆஜராக சீமானுக்கு உத்தரவிட்டார்.

* எந்த கொம்பன் வந்தாலும் சனாதனத்தை எதிர்ப்போம்
ஈரோட்டில் சீமான் அளித்த பேட்டி: நான் அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசவில்லை. வரலாற்றினைதான் பேசினேன். உண்மையை உண்மையாகத்தான் பேச வேண்டும். அதில், அவர்கள் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அருந்ததியர்கள் ஓட்டுக்காக நான் வார்த்தையை மாற்றி, மாற்றி பேசிட்டு இருக்கக்கூடாது. சத்தியத்தையும், உண்மையையும்தான் பேச வேண்டும். நான் ஓட்டுக்காக நிற்பவன் கிடையாது. நாட்டுக்காக நிற்கிறவன். நாங்கள் அதில் சமரசம் செய்பவர் கிடையாது. ஓட்டு போட்டா, போடு போடவில்லை என்றால் போ. அதில் ஒன்றும் எங்களுக்கு நட்டம் கிடையாது. சனாதனம் வடமொழி சொல். அது மனித குலத்திற்கு எதிரான கோட்பாடு. இந்த உலகத்தில் உயர்ந்த சிறந்த குடி உழவன் குடிதான். சனாதனம் 3 ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. தற்போதும் உள்ளது. மனித பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்க்கிற இந்த சனாதன கோட்பாடு, எந்த கொம்பன் கொண்டு வந்தாலும் நாங்கள் எதிர்ப்போம். இவ்வாறு சீமான் கூறினார்.

The post ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Seaman Ajar ,Erode Court ,Erode ,Seeman ,Seeman Ajar ,court ,Dinakaran ,
× RELATED ஈரோடு அருகே விவசாய நிலத்தில்...