×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரை நிர்வாணமாக தூங்கும் போதை ஆசாமிகள்: பயணிகள் முகம் சுழிப்பு

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலம், மாவட்டங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு மற்றும் முக்கிய பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்வார்கள். அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில், மெட்ரோ ரயில் வசதியும் உள்ளதால் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வெளியூர்களுக்கு செல்பவர்கள் பேருந்து கிடைக்காத நேரம் அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் இரவு நேரத்தில் பேருந்து நிலையத்திலேயே தங்கி விட்டு அதிகாலையில் பேருந்துகளில் செல்கின்றனர்.
அதேபோல ஆதரவற்றவர்களும் பேருந்து நிலையத்தில் இரவு, பகல் நேரங்களிலும் தூங்குகின்றனர். இதை பயன்படுத்தி குடிமகன்கள் மற்றும் வழிப்பறி, செல்போன், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ஆசாமிகள் மற்றும் ரவுடிகள் பேருந்து நிலையத்தை கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இரவில் மது அருந்தி விட்டு பாட்டிகளையும், சாப்பிட்ட இலைகளையும் அங்கேயே வீசுகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுவதாக பயணிகளிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில நேரங்களில் போதை ஆசாமிகள் அரை நிர்வாணமாக தூங்குவதால் பயணிகள் முகம் சுழிக்கின்றனர். எனவே பேருந்து நிலையத்தில் மதுபோதையில் தூங்குபவர்களை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘இரவு நேரங்களில் போதை ஆசாமிகள் மற்றும் ரவுடிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தை கூடாரமாக மாற்றி அங்கேயே மது அருந்திவிட்டு சாப்பிடுகின்றனர். மது பாட்டில் மற்றும் சாப்பாடு இலைகளை வீசுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசிகிறது. மது போதையில் அரை நிர்வாணமாகவும் சிலர் தூங்குகின்றனர். இதனால் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பெண் பயணிகள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பேருந்து நிலையத்தை கூடாரமாக பயன்படுத்தும் போதை ஆசாமிகள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் கும்பல் மற்றும் ரவுடிகளை போலீசார் உடனடியாக அகற்ற வேண்டும்,’’ என்றனர்.

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரை நிர்வாணமாக தூங்கும் போதை ஆசாமிகள்: பயணிகள் முகம் சுழிப்பு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Koyambedu bus station ,Chennai ,Koyambedu bus ,
× RELATED கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ்...