×

குடியாத்தத்தில் புதையல் இருப்பதாக கருதப்பட்ட பழமையான ஒரு டன் இரும்பு லாக்கர் உடைப்பு: 1927ல் வெளியான பத்திரிகை, சில்லரை காசுகள் இருந்தன

குடியாத்தம்: குடியாத்தத்தில் புதையல் இருப்பதாக கருதப்பட்ட பழமையான 1 டன் எடை ெகாண்ட இரும்பு லாக்கர் பெட்டியை அதிகாரிகள் முன்னிலையில் தொழிலாளர்கள் உடைத்து திறந்தனர். அதற்குள் 1927ம் ஆண்டு வெளியான பத்திரிகை இதழ் மற்றும் சில்லரை காசுகள் மட்டுமே இருந்தன. வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தப்பேட்டையை சேர்ந்தவர் முகமத் இம்தியாஸ்(59). நார் கம்பெனி நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமான சுமார் 1 டன் எடை கொண்ட இரும்பு லாக்கர் பெட்டியை கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி அதே பகுதியில் உள்ள மசூதி அருகில் வைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மசூதி அருகில் மர்மமான புதையல் பெட்டி இருப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரும், வருவாய் துறையினரும் சென்று பார்வையிட்டனர்.

இரும்பு பெட்டியை திறக்க முயன்றும் முடியவில்லை. முகமத் இம்தியாஸிடம் போலீசார் விசாரித்ததில், 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெட்டியை விலைக்கு வாங்கியதாகவும், பராமரிக்க முடியாததால் மசூதிக்கு கொடுக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இரும்பு பெட்டியை வருவாய் துறையினர் குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒரு அறையில் வைத்து சீல் வைத்தனர். வேலூர் கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவின் படி தாசில்தார் விஜயகுமார் முன்னிலையில் தொழிலாளர்கள் நேற்று இரும்பு பெட்டியை உடைத்து திறந்தனர். அதில், சில பழங்கால நாணயங்கள் உட்பட சில நாணயங்கள் மற்றும் கடந்த 1927ல் வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகை இதழ் இருந்தது. பின்னர் வருவாய் துறையினர் பெட்டியை அதன் உரிமையாளர் மற்றும் மசூதி நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

The post குடியாத்தத்தில் புதையல் இருப்பதாக கருதப்பட்ட பழமையான ஒரு டன் இரும்பு லாக்கர் உடைப்பு: 1927ல் வெளியான பத்திரிகை, சில்லரை காசுகள் இருந்தன appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது...