×
Saravana Stores

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை சமூக நீதியை காப்பாற்ற திமுக தொடர்ந்து போராடும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

பரமக்குடி: சமூக நீதியை காப்பாற்ற திமுக தொடர்ந்து போராடும் என்று பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 66வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இமானுவேல் சேகரன் பிறந்த ஊரான செல்லூர் கிராமத்தின் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி ஜீவன் தலைமையில் கிராம மக்களும், இமானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபா ராணி தலைமையில், குடும்பத்தினரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு சார்பில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ‘‘தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் சமுதாயத் தலைவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பரமக்குடியில் அவரது நினைவிடம் அருகே ரூ.3 கோடி மதிப்பில், அவரது திரு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். இமானுவேல் சேகரன் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடியவர். அவர் எதற்காக போராடினாரோ, அவர் வழியில் சமூக நீதியை காப்பாற்ற திமுக தொடர்ந்து போராடும். சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமத்துவம் படைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்’’ என்றார். இதேபோல் அதிமுக, பாஜ, அமமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், பாமக, தேமுதிக தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

* மணி மண்டபம் அறிவிப்புக்கு அண்ணாமலை, டிடிவி, சீமான் வரவேற்பு
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்: இமானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை: தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் என்பது அரசுகளின் கொள்கை முடிவு. இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன்.

The post இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை சமூக நீதியை காப்பாற்ற திமுக தொடர்ந்து போராடும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : DMK ,Emanuel Sekaran Memorial ,Minister ,Udayanidhi Stalin ,Paramakudi ,Emanuel ,Shekaran ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED எதை பற்றியும் கவலைப்படாமல்...