×

ஜி20 மாநாடு முடிந்து விட்டது இனி உள்நாட்டு பிரச்னையை பாஜ அரசு கவனிக்க வேண்டும்: கார்கே வலியுறுத்தல்

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாடு முடிந்துள்ள நிலையில், இனி பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, மணிப்பூர் வன்முறை போன்ற உள்நாட்டு பிரச்னைகளில் ஒன்றிய பாஜ அரசு கவனம் செலுத்த வேண்டுமென காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இப்போது ஜி-20 கூட்டம் முடிவடைந்துள்ள நிலையில், பாஜ அரசு உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் ஓட்டல்களில் ஒரு சாப்பாட்டின் விலை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டில் வேலையின்மை விகிதம் 8% ஆக உள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் இருண்டதாக உள்ளது. பிரதமர் மோடியின் தவறான ஆட்சியால், ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த விஷயத்தில், சிஏஜியின் பல அறிக்கைகள் பாஜவை அம்பலப்படுத்தி உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் ரூ.13,000 கோடி ஜல் ஜீவன் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் ஊழலை வெளிப்படுத்திய தலித் ஐஏஎஸ் அதிகாரி துன்புறுத்தப்பட்டுள்ளார். அதே போல, பிரதமரின் உற்ற நண்பரின் மற்றொரு கொள்ளையும் சமீபத்தில் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2019 மக்களை தேர்தல் முன்பாக, ரிசர்வ் வங்கி கருவூலத்தில் இருந்து ரூ.3 லட்சம் கோடியை விடுவிக்க அப்போதைய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யாவுக்கு அழுத்தம் தரப்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறை தொடங்கி உள்ளது. இமாச்சலப் பிரதேசம் இயற்கைப் பேரிடரால் தத்தளிக்கிறது. ஆனால் திமிர்பிடித்த பாஜ அரசு, அதை தேசிய பேரிடராக அறிவிப்பதைத் தவிர்த்து வருகிறது.
இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில், பிரதமர் மோடி உண்மையை மறைக்க கடுமையாக முயற்சிக்கிறார். ஆனால் பொதுமக்கள், கவனத்தை சிதறடிக்கும் பிரச்னைகளை கவனிக்காமல், உண்மையைக் கேட்கவும் பார்க்கவும் விரும்புகிறார்கள். 2024 மக்களவை தேர்தலில் பாஜ அரசை வெளியேற்ற மக்கள் வழிவகை செய்யத் தொடங்கி விட்டார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post ஜி20 மாநாடு முடிந்து விட்டது இனி உள்நாட்டு பிரச்னையை பாஜ அரசு கவனிக்க வேண்டும்: கார்கே வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : G20 conference ,Baja government ,Karke ,New Delhi ,G20 Summit ,Union ,Manipur ,
× RELATED உங்கள் ஜனநாயக உரிமைகளை நிச்சயமாக...