×

ஒரே நாடு ஒரே தேர்தல் பிரசாரம் 5 மாநில தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி: பிரசாந்த் பூஷன் விமர்சனம்

புவனேஷ்வர்: ஒரே நாடு ஒரே தேர்தல் பிரசாரமானது 5 மாநில தேர்தலை ஒத்திவைப்பதற்காக முயற்சியாகும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசானது ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பாக நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரான பிரசாந்த் பூஷன், ‘‘இந்தியா போன்ற நாடாளுமன்ற ஜனநாயக நாடுகளில் ஒரே நாடு, ஒரே தேர்தலை செயல்படுத்த முடியாது. ஏனென்றால் நமது அமைப்பில் ஒரு அரசு இடைக்காலத்தில் வீழ்ந்து பெரும்பான்மையை இழக்கும்போது புதிய அரசு அமைக்கப்படும்.

எனினும் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதுபோன்ற சூழலில் ஜனநாயகத்துக்கு எதிரான குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம். அதாவது ஜனநாயக முறையில் இருந்து குடியரசு தலைவர் ஆட்சி முறைக்கு மாறுகிறோம். எனவே இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றிலும் மீறும் செயலாகும். இது குறித்து ஒன்றிய அரசு நன்கு அறிந்திருக்கிறது. மாநிலங்களவையில் ஒன்றிய அரசுக்கு பெரும்பான்மை இல்லை. இந்த உண்மைகள் அனைத்தும் அரசுக்கு தெரியும். ஆனாலும் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநில தேர்தல்களை ஒத்திவைக்கும் ஒரே குறிக்கோளுடன் இந்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றது” என்றார்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் பிரசாரம் 5 மாநில தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி: பிரசாந்த் பூஷன் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Bhubaneswar ,Supreme Court ,Prosecutor ,Prasant ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு