×

திருவேற்காட்டில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார்

பூந்தமல்லி: திருவேற்காட்டில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார். தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருவேற்காடு எஸ்.கே.டி.ஜெ. அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுந்தர சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 126 பேருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆவடி சா‌.மு.நாசர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். திருவேற்காடு நகர மன்ற தலைவர் மூர்த்தி, நகர் மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், பள்ளி செயலர் சத்தியநாராயணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அருணகிரி, நகர் மன்ற உறுப்பினர்கள் இளங்கோவன், உமாபதி, கோமதி துரைகோபால், பிரதானம், சங்கர், ஜானகி சுடலைமணி, சுதாகர், இளையராஜா, ஆஷா ஆசீர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 126 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர், அவர் பேசுகையில், ‘‘தமிழகத்தில் மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். மாணவர்களின் கல்வி எக்காரணத்தை முன்னிட்டும் தடைபடக் கூடாது என்பதற்காக, முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்ற இந்தியாவுக்கு முன்மாதிரியான சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வீரத்திலும், தொழில்நுட்பத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கியுள்ளனர். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தான் மிகப்பெரிய சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளனர். இங்கு படிக்கும் மாணவர்கள் உலக அளவில் சிறந்தவர்களாக உருவாக வேண்டும். மாணவர்களின் கல்விக்கு இந்த ஆட்சி உறுதுணையாக இருந்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியாக இருக்கும்,’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர், திமுக வட்ட செயலாளர்கள் கோவி. சத்யகிரி, கோலடி சரவணன், துரை கோபால், பெஞ்சமின், குமார், ரஜினி, குமாரசாமி, சாது மற்றும் திமுக நிர்வாகிகள், பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுந்தர சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி பிரபா நன்றி கூறினார்.

The post திருவேற்காட்டில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tiruvelakad ,b.k. Nassar ,Poonthamalli ,b.k. ,Nassar ,Department of School Education of the Government of Tamil Nadu ,Sa. ,
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை