×

பாப்பரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: பாப்பரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்ட தொடக்க விழாவை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே தன் சுத்தம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, காய்கறி தோட்டம், கழிவு மறுசுழற்சி மற்றும் நெகிழி இல்லா பள்ளி வளாகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்ட தொடக்க விழாவை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்த பள்ளி மிகவும் செழுமையாக பசுமை நிறைந்ததாக உள்ளது பாராட்டுக்குரியது. இந்த திட்டம் மூலமாக ஒவ்வொரு மாதமும் 20 மரக்கன்றுகள் நட்டு அதை பராமரிக வேண்டும். பள்ளியின் சுற்றுப்புறத்தை சுத்தமாக, தூய்மையாக வைத்து பராமரிக்க வேண்டும். காய்கறி தோட்டங்கள் அமைத்து அதனை முறையாக பராமரித்து அதன் மூலம் கிடைக்கும் சத்தான காய்கறிகளை உங்கள் பள்ளியின் சத்துணவில் பயன்படுத்துவதை வலியுறுத்தும் விதமாகவும் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது.  பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும், வாரத்தின் முதல் நாளன்று பள்ளித் தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கலைஞரின் நூற்றாண்டினை போற்றும் விதமாக ஒவ்வொரு மாதமும் 20 மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் வேண்டும். குழுக்கள் ஏற்படுத்தி செயல்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பள்ளித் தோட்டம் உருவாக்கி, பராமரித்து மதிய உணவு திட்டத்திற்கு உதவுதல். குழு போட்டிகள், கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடத்துதல், சிறப்பாக செயல்படும் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்றார்.

பிறகு கலெக்டர் தலைமையில் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பள்ளி தூய்மை உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பள்ளியில் மாதந்தோறும் 20 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியை துவக்கி வைத்தும், காய்கறி விதைகளை தூவி காய்கறி தோட்டம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். இந்த விழாவில், முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம், பள்ளி தலைமை ஆசிரியர் நாகலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பாப்பரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம்: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Papharambakkam Government High School ,Tiruvallur ,Albi ,Paprambakkam Government High School ,Dinakaraan ,
× RELATED திருவள்ளூர் தொகுதி எம்.பி.யாக...