×

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி குறித்து விசாரணை: தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நேற்று முன்தினம் இரவு இசை நிகழ்ச்சி நடந்தது, இசை நிகழ்ச்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் நிகழ்ச்சி நடந்த இடத்தில் போதிய இட வசதிகள் இல்லை. அதேநேரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கான முன்னேற்பாடுகளும் சரியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை.

இதனால் பொதுமக்கள் நிகழ்ச்சி நடந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல ஆயிரம் பேர் நிகழ்ச்சிக்காக டிக்கெட் கையில் இருந்தாலும், அவர்களால் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கூட்ட நெரிசலில் செல்ல முடியவில்லை. இதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியின் குளறுபடிக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் பகுதியில் நடந்த இசைக்கச்சேரியின் போது அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டமும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இது தொடர்பாக விரிவான விசாரணை செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜூக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகமான கூட்டத்திற்கான காரணங்கள். வாகனங்கள் நிறுத்துமிடம், மருத்துவ வசதிகள், நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் நிகழ்ச்சி தொடர்பாக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படா வண்ணம் தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

The post ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி குறித்து விசாரணை: தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AR Raghuman ,DGP ,Shankar Jiwal ,Tambaram Police Commissioner ,Chennai ,Marakuma ,Nenjam ,Panaiyur ,East Coast Road, Chennai ,Tambaram ,Police Commissioner ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார்...