×

பேருந்தில் தவறிவிட்ட நகைப்பையை போலீசிடம் ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டு: 6 சவரன் நகைகள் உரியவரிடம் சேர்ப்பு

திருப்போரூர்: கோவளம் அருகே பேருந்தில் தவறிவிட்ட நகைப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநரை போலீசார் பாராட்டினர். பின்பு, 6 நகைகள் உரியவரிடம் சேர்க்கப்பட்டது. பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி சுதா (33). இவர் நேற்று காலை கேளம்பாக்கத்தை அடுத்த கோவளம் அருகே திருவிடந்தை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர், நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து ேகாவளம் வந்து கோவளத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் 515ஏ என்ற மாநகர பேருந்தில் ஏறி தாம்பரம் சென்றுள்ளார். பின்னர், தாம்பரத்தில் இறங்கி வீட்டிற்கும் சென்று விட்டார்.

இந்நிலையில், தாம்பரத்தில் பயணிகளை இறக்கி விட்ட அப்பேருந்தின் ஓட்டுனரான மணிமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (47), நடத்துனரான மதுராந்தகம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (38) ஆகியோர் பேருந்தில் கட்டைப்பை ஒன்று கேட்பார் இன்றி கிடப்பதை பார்த்தனர். அதை திறந்து பார்த்தபோது அதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 6 சவரன் நகைகள் மற்றும் துணிமணிகள் இருந்துள்ளன. இதையடுத்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்து, பின்பு கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று அந்த பையை ஒப்படைத்தனர். இதனிடையே, பையை பறிகொடுத்த சுதா தாம்பரம், கேளம்பாக்கம் காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தார்.

கேளம்பாக்கம் போலீசார் சுதாவை வரவழைத்து ஓட்டுனர், நடத்துனர் முன்னிலையில் அவர் தொலைத்த கட்டைப்பை மற்றும் அதிலிருந்த 6 சவரன் தங்க நகை, துணிமணிகளை ஒப்படைத்தனர். இவற்றை பெற்றுக்கொண்ட சுதா நேர்மையுடன் நடந்துக்கொண்ட ஓட்டுனர், மற்றும் நடத்துனருக்கு நன்றி தெரிவித்தார். காவல்துறையினரும் ஓட்டுனர் மற்றும் நடத்துனவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post பேருந்தில் தவறிவிட்ட நகைப்பையை போலீசிடம் ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டு: 6 சவரன் நகைகள் உரியவரிடம் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Tirupporur ,Kovalam ,Savaran ,Dinakaran ,
× RELATED கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில்...