×

திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி : விரைந்து முடிக்க கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூரில், மழைநீர் வடிகால் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓஎம்ஆர் சாலையில் இரு புறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. ஆனால், சாலையை அகலப்படுத்தவில்லை. இதனிடையே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரவுண்டானா பகுதியில் இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களும் அகற்றப்பட்டன. சாலை அமைப்பதற்காக சிறிதளவு பள்ளம் தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், இதுவரை சாலை அகலப்படுத்தி அமைக்கும் பணியை தொடங்கவில்லை.

இதனிடையே, மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடரக்கூடாது என்பதால் சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாவட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு பேரூராட்சி பகுதியில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டது. ஆனால், பள்ளம் தோண்டும் பணியும் முழுமை அடையவில்லை. தோண்டிய இடங்களில் கால்வாய் பணியும் தொடங்கவில்லை. சில இடங்களில் குறிப்பாக ரவுண்டானா பகுதியில் கான்கிரீட் அமைப்பதற்கான கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை வெளியே நீட்டிக்கொண்டு நிற்பதால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒருவித அச்சத்துடனேயே நடமாட வேண்டிநிலை உள்ளது. சில இடங்களில் சிறிய மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் போன்றவையும் உள்ளது.

இந்த இடங்களுக்கு வரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் கால்வாயை தாண்ட முடியாமல் கீழே இறங்கி மேலே ஏறி வரும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் உள்ளாட்சி பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் பேசியபோது, ‘‘இயந்திரக் கோளாறு காரணமாக பணி தாமதமாகிறது. எங்களால் ஒன்றும் செய்ய இயலாது,’’ என்று கூறியதாக தெரிகிறது. ஆகவே, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினரின் இந்த அலட்சிய போக்கு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழை நீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

*கேளம்பாக்கம் மற்றும் படூர் பகுதிகளிலும் மழை நீர் வடிகால்வாய் பணிகள் எந்தவிதமான முறையான திட்டமிடலும் இன்றி பெரிய அளவிலான பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இதனால், ஒரு பக்க சாலையில் இரு திசையில் செல்லும் வாகனங்கள் செல்கின்றன. இதன் காரணமாக கேளம்பாக்கம், படூர் பகுதிகளை கடக்க 1 மணி நேரத்திற்கும் மேலாகிறது. ஆகவே, படூர், கேளம்பாக்கம் பகுதிகளிலும் இரவு நேரங்களில் பணிகளை மேற்கொண்டால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பிரச்னை இன்றி பணியை முடிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

The post திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி : விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirporur OMR ,Thiruporur ,Tirporur ,Dinakaraan ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் டாஸ்மாக் இடமாற்றம் செய்ய கோரிக்கை