×

செய்யூரில் போதிய வசதிகள் இல்லாததால் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்: கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும், மருத்துவர்களை நியமிக்கவும் கோரிக்கை


செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பஜார் வீதி மையப்பகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை கட்டிடம் ஆரம்ப சுகாதார நிலையமாக இயங்கி வந்தது. அதன்பின்னர், செய்யூர் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனாலும், மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டும் வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் புதுப்பிக்கப்படவில்லை. மருத்துவமனை இட வசதிகளையும் விரிவாக்கமும் செய்யப்படவில்லை. மேலும், நோய்களின் தன்மைகளுக்கு ஏற்றார்போல் கருவிகளும் இங்கு இல்லை என நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

செய்யூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நல்லூர், புத்தூர், ஓணம்பாக்கம், தண்ணீர்பந்தல், சித்தாற்காடு, அம்மனூர், கீழச்சேரி, பெரியவெண்மணி, அரியனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால், இங்கு வரும் நோயாளிகள் மருத்துவமனையின் அவல நிலையை கண்டு அஞ்சி வேறு மருத்துவமனைக்களுக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு காரணம் இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்களோ, செவிலியர்களோ இல்லை.

செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயங்களுடன் இங்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி மட்டுமே அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். மற்ற மருத்துவமனைக்கு செல்வதற்குள் அதிக உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்படடு வருகிறது. மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் கட்டிடங்கள், நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள், மருந்து விநியோக அறை அனைத்தும் பழுதாகி ஆபத்தான முறையில் உள்ளது. பழுதான இந்த கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்டி மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொதுமக்களும் தற்போது உள்ள தொகுதி எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்ததன்பேரில் எம்எல்ஏவும் அவ்வப்போது மருத்துவமனையை ஆய்வு செய்து வருவதோடு, இதுகுறித்து சட்டமன்றத்திலும் பலமுறை இம்மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழக அரசு தனி கவனம் செலுத்தி மருத்துவமனையை தரம் உயர்த்தி செய்து கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*அவசர சிகிச்சை பிரிவு வேண்டும்
கடந்த 10 வருடங்களுக்கு முன் இம்மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது. ஆனாலும், இதுவரையில் இங்கு அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்படவில்லை. மேலும், சிகிச்சைக்கான உபகரணங்கள் இல்லாததால் பல்வேறு நோயாளிகள் இம்மருத்துவமனைக்கு வராமல், வேறு மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், இங்கு பிரேத பரிசோதனை செய்யும் வசதியும் இல்லாததால் பல்வேறு விபத்துக்களில் இறப்பவர்களை நீண்ட தூரமுள்ள மதுராந்தகம் அல்லது செங்கல்பட்டு மருத்துவமனை வரையில் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலையுள்ளது. இதனால், இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் போலீசார் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

*அடிப்படை வசதி தேவை
மருத்துவமனைக்கு நோயாளிகளை நலம் விசாரிக்க வரும் உறவினர்களுக்கு காத்திருப்பு அறை இல்லாததால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தரையில் அமர வேண்டிய நிலை உள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதியோ கழிப்பறை வசதியோ இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செய்யூரில் போதிய வசதிகள் இல்லாததால் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்: கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும், மருத்துவர்களை நியமிக்கவும் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dukur ,Government General Hospital ,Chengalpattu, Chengalpattu ,Ditur ,Dinakaran ,
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...