×

யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் சாம்பியன்: 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் மார்கரெட் கோர்ட் சாதனையை சமன் செய்து அசத்தினார்.
பரபரப்பான இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டானில் மெத்வதேவுடன் (27 வயது, 3வது ரேங்க்) மோதிய ஜோகோவிச் (36 வயது, 2வது ரேங்க்) 6-3, 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்களில் வென்று யுஎஸ் ஓபன் கோப்பையை 4வது முறையாக கைப்பற்றினார்.

இப்போட்டி 3 மணி, 16 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றி மூலம், ஆஸி. வீராங்கனை மார்கரெட் கோர்ட் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று படைத்த சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார். ஆண்கள் பிரிவில் அவர் ஏற்கனவே முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் (22 பட்டங்கள்), சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் (20) அடுத்த இடங்களில் உள்ளனர். ஒரு சீசனில் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் சாதனையை 4 முறை நிகழ்த்திய (2011, 2015, 2021, 2023) முதல் வீரர் என்ற பெருமையும் ஜோகோவிச்சுக்கு கிடைத்துள்ளது.

10 முறை யுஎஸ் ஓபன் பைனலில் விளையாடி உள்ள அவர், அதில் 4 முறை கோப்பை வென்று அசத்தியுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் லாரா சீஜ்மண்ட் – வேரா ஸ்வோனரேவா (ரஷ்யா) ஜோடியுடன் மோதிய எரின் ரவுட்லிப் (நியூசி.) – கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி (கனடா) இணை 7-6 (11-9), 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 14 நிமிடங்களுக்கு நீடித்தது.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் சாம்பியன்: 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் appeared first on Dinakaran.

Tags : US Open Tennis ,Jokovich ,New York ,Novak Djokovic ,US Open ,Djokovich ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரசாரத்தின்போது...