×

இந்தியா-சவுதி அரேபியா உறவு உலக நலனுக்கு முக்கியமானது: பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடனான சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியா, சவுதி அரேபியா இடையேயான உறவு, பிராந்தியம் மற்றும் உலகின் ஸ்திரத்தன்மை மற்றும் நலனுக்கு முக்கியமானது’ என்றார். சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்லாஷிஷ் அல் சாத் 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 2 நாட்கள் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவர், நேற்று இந்தியா சவுதி அரேபியா வியூக கூட்டாண்மை கவுன்சிலின் முதல் கூட்டத்தில் பங்கேற்றார். கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடியின் ரியாத் பயணத்தின் போது இந்த கவுன்சில் உருவாக்கப்பட்டது.
முன்னதாக, ஜனாதிபதி மாளிகைக்கு வந்த இளவரசர் முகமது பின் சல்மானுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் அவரை வரவேற்றனர். தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது, கூட்டாண்மை கவுன்சிலின் அரசியல், பாதுகாப்பு, சமூக மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக் குழு மற்றும் பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக் குழு ஆகிய 2 குழுக்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தனர்.
பின்னர், வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர். மேலும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இதைத் தொடர்ந்து வர்த்தகம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்களில் பிரதமர் மோடியும், இளவரசர் முகமது பின் சல்மானும் கையெழுத்திட்டனர். இருநாடுகளும் உள்ளூர் கரன்சியில் வர்த்தகம் செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார வழித்தடத்தை தொடங்க ஜி20 கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த வழித்தடமானது இரு நாடுகளை இணைப்பது மட்டுமின்றி, ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் இணைப்பை வழங்கவும் உதவும். சவுதி அரேபியா இந்தியாவின் மிக நெருக்கமான மற்றும் மிகப்பெரிய கூட்டுறவு நாடுகளில் ஒன்றாகும். இந்தியா, சவுதி அரேபியா இடையேயான உறவு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு மட்டுமின்றி உலகளாவிய நன்மைக்கானது.

இந்த சந்திப்பில் எங்கள் நெருங்கிய கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல முயற்சிகளை அடையாளம் கண்டுள்ளோம்’’ என்றார். இளவரசர் முகமது பின் சல்மான் பேசுகையில், ‘‘இந்தியாவிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜி20 மாநாட்டை தலைமை ஏற்று சிறப்பாக நடத்தியதற்காக இந்தியாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜி20 மாநாட்டில் எடுக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் முழு உலகிற்கும் நன்மை பயக்கும்’’ என்றார்.

The post இந்தியா-சவுதி அரேபியா உறவு உலக நலனுக்கு முக்கியமானது: பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடனான சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Saudi Arabia ,Modi ,Prince Mohammed bin Salman ,New Delhi ,Saudi ,Arabia ,
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்