×

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில்: 16ம் தேதி முதல் இயக்கம்; இன்று முதல் முன்பதிவு

ஊட்டி: குன்னூர்- ஊட்டி, ஊட்டி-கேத்தி-ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே விடுமுறை கால சிறப்பு நீலகிரி மலை ரயில் 16ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயில்கள் வரும் அக்டோபர் 24ம் தேதி வரை இயக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. மேட்டுபாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த மலை ரயிலில் பயணிக்க பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கடைபிடிக்கப்படும் கோடை சீசன், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படும் 2வது சீசனில் சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டிக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஊட்டி மலை ரயிலில் பயணித்து இயற்கை காட்சிகளை பார்வையிட்டு மகிழ்வார்கள்.

சீசனின் போது தென்னக ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுவது வாடிக்கை. இந்நிலையில் இந்தாண்டுக்கான இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு விடுமுறை கால சிறப்பு மலை ரயில் சேவை இயங்கும் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் சேவை 17, 18ம் தேதிகள் மற்றும் அக்டோபர் 1,‌ 2ம் தேதி ஆகிய விடுமுறை நாட்களில் குன்னூரில் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40க்கு ஊட்டி வந்தடையும். இதேபோல் ஊட்டியில் இருந்து வரும் 16, 17, 30ம் தேதிகள் மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55க்கு குன்னூர் சென்றடையும். மேலும் மேட்டுபாளையம்- ஊட்டி இடையே 16, 30, அக்டோபர் 21ம் தேதி (சனிக்கிழமைகளில்) அக்டோபர் 23ம் தேதி (ஆயுதபூஜை) மேட்டுபாளையத்தில் காலை 9.10க்கு புறப்பட்டு மதியம் 2.45 மணிக்கு ஊட்டிக்கு வந்தடையும்.

ஊட்டி- மேட்டுபாளையம் இடையே வரும் 18ம் தேதி, அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி), 22 மற்றும் 24ம் தேதி (விஜயதசமி) ஆகிய நாட்களில் காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20க்கு மேட்டுபாளையம் சென்றடையும். மேட்டுபாளையம்- குன்னூர் இடையே முதல் வகுப்பில் 40 இருக்கைகளுடன் ரயில் இயக்கப்படும். குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல்வகுப்பில் கூடுதலாக 40 இருக்கைகள் சேர்த்து என 80 இருக்கைகளுடனும், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகளுடனும் இயக்கப்படும். இதுதவிர சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக பயணம் செய்து மகிழ்ந்திடும் வகையில் ஊட்டி- கேத்தி- ஊட்டி இடையே 3 ரவுண்ட் ‘ஜாய் ரைட்’ சிறப்பு ரயில் வரும் 17ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதி ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் இயக்கப்படுகிறது. விடுமுறை கால சிறப்பு மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க முடியும். இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில்: 16ம் தேதி முதல் இயக்கம்; இன்று முதல் முன்பதிவு appeared first on Dinakaran.

Tags : Holiday ,Mettupalayam ,Ooty ,Coonoor ,Kethi ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குரங்குகள் அட்டகாசம்