×

சூடிக் கொடுத்த சோழன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சோழர் குலத்தில் ஒரு மரபு உண்டு. அதன் படி சோழ மன்னர்கள் அனைவரும், எந்த பொருளையும் தாங்கள் அனுபவிக்கும் முன் சிவபெருமானுக்கு அதை மனதால் சமர்ப்பணம் செய்வார்கள். அதன் பிறகு சிவ பிரசாதமாகத்தான் அந்தப் பொருளை ஏற்பார்கள். உலகிலேயே தலை சிறந்த மன்னனாக விளங்கி, கடல் கடந்து சென்று சோழதேசத்தின் புலிக்கொடியைப் பறக்கவிட்ட ராஜராஜசோழன்கூட இதற்கு விதி விலக்கு இல்லை.

ஆம்..! அரசர்களிலேயே தலைசிறந்த அரசனாக விளங்கியபோதும், ராஜ ராஜன், தன்னை அனைவரும் ‘‘சிவபாத சேகரன்’’ (அதாவது ஈசன் மலரடியை தலையில் சூடியவன் என்று பொருள்) என்று அழைப்பதையே விரும்பினான். அப்படிப்பட்ட சோழ மரபில், தமிழ்த் திருநாடு செய்த தவப் பயனாக வந்து பிறந்தான் ஒரு மன்னன்.

இவனும் தனது குலத்து முன்னோர்கள் போல, ஈசன் சேவடியிலேயே சிந்தையைப் பதித்து பக்திப்பழமாக வளர்ந்தான். உரிய பருவத்தில் முடியும் சூட்டிக் கொண்டான். இது இப்படி இருக்க, சோழ வள நாட்டிலே கோடைவெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் தாக்கத்தைக் கட்டுப் படுத்த நாடெங்கும் இருந்த சிவன்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டது.

அந்த சமயம், கொற்கையிலிருந்து வந்த வியாபாரி ஒருவன், உயர்ந்த ரக முத்து மாலையை மன்னனுக்குச் சமர்ப்பித்தான். அதன் அழகில், தன்னை மறந்த மன்னன், அதை வேகமாகத் தனது கழுத்தில் எடுத்து சூடிக்கொண்டான். ஈசனுக்கு சமர்ப்பணம் செய்த பின்பே, அனைத்தையும், அனுபவிக்க வேண்டும் என்ற குலவழக்கத்தை மறந்தான். மந்திரிப் பெருமக்கள் இதை கவனித்தாலும், அவர்களுக்கு இது பெரிய தவறாகத் தோன்றவில்லை.

ஆகவே, மன்னனிடம் எதுவும் சொல்லவில்லை. அந்த மாலையின் மீது இருந்த அபரிமிதமான பிரியத்தால், மன்னன் அதைத் தனது கழுத்தை விட்டு கழற்றவே இல்லை. மறுநாள் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் கோடை வெப்பம் நீங்க சிறப்பு வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த சிறந்த பூஜையில் பங்கு பெற்று, ஈசன் அருளைப் பெறுவதற்காக கிளம்பினான் மன்னன்.

துள்ளி ஓடும் காவிரியில் நீராடிவிட்டு, அப்பன் ஈசனை சேவிக்கலாம் என்ற எண்ணத்துடன், காவிரியில் இறங்கினான். நீராடிவிட்டு கரை ஏறினான். முத்து மாலை பத்திரமாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளும் நோக்கத்தில், கழுத்தை தடவிப் பார்த்தான். முத்துமாலையைக் காணவில்லை. பதறிப்போனான் மன்னன். தனது பணியாட்களைக் கொண்டு காவிரியில் தேடச் சொன்னான். பல நாழிகை தேடியும், ஆரம் கிடைக்கவில்லை. மனம் நொந்து போனான் மன்னன்.

அப்போதுதான் அவனுக்கு, அவனது குல வழக்கம் நினைவுக்கு வந்தது. ஈசனுக்குச் சமர்ப்பணம் செய்யாமல் முத்துமாலை அணிந்ததால்தான், அது தொலைந்துவிட்டது என்று எண்ணினான். ஆகவே, பெரும் அபச்சாரம் செய்துவிட்டதாக எண்ணிக் கலங்கினான். ஒருவழியாகத் தன்னை தேற்றிக் கொண்டவன், ஒரு முடிவுக்கு வந்தான். முத்து மாலையை அணியும் முன், ஈசனுக்கு அதை சமர்ப்பிக்காமல் தவறு செய்துவிட்டோம்.

இப்போது மாலை தொலைந்துவிட்டது. ஆகவே செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக, தொலைந்துபோன முத்து மாலையை மனதார ஈசனுக்கு சமர்ப்பணம் செய்வோம் என்று தீர்மானித்தான். கரம் குவித்து முக்கண் முதல்வனை அகத்தில் நிறுத்தி, மனதார முத்து மாலையை ஆனைக்காவல் அண்ணலுக்கு சமர்ப்பணம் செய்தான். பிறகு, நெஞ்சத்துக் கவலையை ஒழித்தவனாக கோயிலுக்குச் சென்றான்.

அங்கே, குடம்குடமாக காவிரியில் இருந்து நீர் கொண்டுவரப் பட்டு, அடுக்கப் பட்டிருந்தது. வேதியர்களால் வேள்வித்தீ வளர்க்கப்பட்டு, ருத்ர ஜெபம் செய்யப்பட்டது. பிறகு, மந்திரிக்கப் பட்ட காவிரிநீரை மங்கள வாத்தியங்கள் முழங்க, ஒவ்வொரு குடமாக ஆனைக்காவல் அண்ணலுக்கு அபிஷேகம் செய்தார்கள். அந்த அருட்காட்சியைக் கண்டு மன்னன் நெக்குருகி நின்றுகொண்டிருந்தான். அப்போது ஒரு குடம் ஈசன் திருமுடியில் கவிழ்க்கப்பட, அதிலிருந்து சடசட என்ற சத்தம் எழுப்பிக்கொண்டு, ஒரு முத்துமாலை வெளி வந்து சிவலிங்கத்தின் மீது அலங்காரமாக விழுந்தது.

அந்தக் காட்சியை கண்ட மன்னன், அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான். காரணம் இல்லாமல் இல்லை. எந்த முத்துஆரத்தை அவன், ஈசனுக்கு சமர்ப்பணம் செய்யாமல் சூடினானோ, எந்த ஆரத்தை காவிரிநீரில் பறிகொடுத்தானோ, எந்த ஆரம் பறிபோனபிறகு, அதை ஈசனுக்கு சமர்ப்பணம் செய்தானோ, அந்த ஆரம் இப்போது ஆனைக்காவல் ஈசன் கழுத்தில் அழகுற வீற்றிருக்கிறது. அதைக் கண்ட மன்னன், ஈசனின் கருணையை எண்ணி வியந்தான்.

எந்த ஒரு பொருளையும், மனிதன் அனுபவித்த பிறகு இறைவனுக்கு, அதை சமர்ப்பணம் செய்ய மாட்டார்கள். அப்படி இருக்க, குலவழக்கத்தை மீறி சமர்ப்பணம் செய்யாமல், மன்னன் சூடிய மாலையை, ஈசன் அகமகிழ்ந்து, சூடியிருப்பது விந்தையிலும் விந்தை அல்லவா? குல வழக்கத்தை மீறியது தவறு என்று உணர்ந்து, மனதார ஈசனை சரண் புகுந்து, மன்னன் செய்த பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொண்டதை அல்லவா இது காட்டுகிறது. சூடிய மாலையை சமர்ப்பணம் செய்த போதும், அந்த பிறை சூடி தனது பக்தியை மெச்சி முத்து ஆரத்தை ஏற்றது, மன்னனை திக்கு முக்காட வைத்தது. சுற்றி இருந்த மக்களும், இந்த அதிசயத்தை கண்டு `ஹர.. ஹர.. மகாதேவா…’ என்று கோஷமிட்டார்கள்.

இப்படி பக்தியால், தான் சூடிய மாலையை இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்த மன்னனை, இந்த நிகழ்வின் நினைவாக, அனைவரும் ‘‘ஆரம் சாத்து சோழன்’’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள். திருவானைக்காவலை பாட வந்த திருஞானசம்பந்தர், இந்த சம்பவத்தை தனது பதிகத்தில் அழகாகக் குறிப்பிடுகிறார்.

‘‘தாரமாய மாதரா டானொர்பாக மாயினான்
ஈரமாய புன்சடை ஏற்றதிங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை யானைக்காவி லண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.’’

என்பது மூன்றாம் திருமுறையில், ஐம்பத்தி மூன்றாம் பதிகத்தில் மூன்றாவது பாடல்.

தாரமாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான். கங்கையைத் தாங்கிய சடை முடியில் சந்திரனையும் சூடியவர். சோழ அரசனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனது தொலைந்த இரத்தினமாலையைத் திருமஞ்சன நீரோடு தம் திருமார்பில் ஏற்றவர். திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை, அன்புடன் வணங்குவோர்களின் தீவினைகள் யாவும் நீங்கும் என்பது மேலே நாம் கண்ட பாடலின் தேர்ந்த பொருளாகும்.

அரங்கனுக்கு சூடிக்கொடுத்த சுடர்க் கொடி, கோதையை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், திருவானைக்காவல் அண்ணலுக்கு முத்து மாலையை சூடிக்கொடுத்த சோழனைப் பற்றிய தகவல் நமக்குப் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது அல்லவா? சோழனைப் போல, நாமும் நமது உள்ளார்ந்த பக்தியால் இறைவனை வேண்டினால், நமக்கும், சோழனுக்கு அருளியது போலவே, ஈசன் அருளுவான்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post சூடிக் கொடுத்த சோழன் appeared first on Dinakaran.

Tags : Cholar ,Cholha ,Sozhan ,
× RELATED சோழர் காலத்தைச் சேர்ந்த கலிய மர்த்தன...