×

சென்னை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட மதுரவாயல் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று (11.09.2023) நேரில் சென்று சிறுவனின் தாயருக்கு ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட மதுரவாயல் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது; சென்னை மாநகரில் டெங்குக் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி பலவகைகளில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகளை சிறுவட்டங்களாக (Sector) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருகளில் வாரந்தோறும் கொசுபுழு வளரிடங்களான, மேல்நிலை/கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருள்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் மற்றுமுள்ளவைகள்) ஆகியவற்றை கண்டறிந்து கொசுபுழுக்கள் இருப்பின் அதனைஅழித்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், தற்போது கொசு ஒழிப்பு பணிக்கென 954 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்களும், 2324 ஒப்பந்த பணியாளர்களும் மொத்தம் 3278 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும், 424 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்ப்ரேயர்கள், 324 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 1 சிறியபு கைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்கள், புதிய கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலும் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட வேண்டும் எனவும், டெங்குகொசு உற்பத்தியாக கூடிய நண்ணீர் தேங்கிய இடங்களிலும், டயர்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அனைத்துபள்ளிகள், பூங்காக்கள், அரசு கட்டிடங்களில் உள்ள தேவையற்ற மழைநீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டிடக் கட்டுமானங்கள் நடைபெறும் இடங்களிலும் கட்டிடக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டிருக்கின்ற இடங்களிலும், காலி மணைகளிலும் தண்ணீர் தேங்கியிருந்து அதன்மூலம் டெங்கு கொசுபுழுக்கள் உற்பத்தி இருப்பதை கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு மண்டலத்திலும் அரசு மருத்துவமனை, சென்னை மாநகராட்சி மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் பகுப்பாய்வு கூடங்களில் காய்ச்சல் கண்டவர்களின் விவரங்கள் தினந்தோறும் பெறப்பட்டு சம்பந்தபட்ட மண்டலங்களுக்கு உடன் அனுப்பி உரிய சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு கொசு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பகிறதா என கண்காணிக்கப்பட வேண்டும். அதிக காய்ச்சல் கண்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு இரத்த தடவல் எடுக்கப்பட்டு உரிய சிகிச்சை இலவசமாக அளிக்கபட வேண்டும். இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு போன்றவை அம்மா உணவகங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பள்ளிகள்மற்றும் மருத்துவ முகாம்களிலும் இலவசமாகவழங்கப்பட வேண்டும்.

சுகாதார ஆய்வாளர்களை கொண்டு பள்ளி இறை வணக்கத்தின் போது டெங்கு விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றியும், ஏடிஸ் கொசு உற்பத்தி பற்றியும், அது தடுக்கும் வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் துண்டறிக்கைகள் மூலம் விநியோகிக்கப் பட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை மழைக்காலங்களில் வரக்கூடிய நோய்களை எதிர்க்கொள்ள போதிய அளவு மருந்துகள், உபகணரங்களுடன் போதுமான மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும், மேலும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகா வண்ணம் மூடிவைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பூஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதன பெட்டியின் கீழ்த்தட்டு, மணி பிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொளளப்பட்டு வருவதாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார்.

The post சென்னை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Radhakrishnan ,Chennai ,Metropolitan Chennai Corporation ,Pillayar temple street ,Maduravayal ,Guravaravakam Zone ,Chennai Municipality ,
× RELATED போக்குவரத்து சிக்னல்களில்...