×

மன தைரியத்துடன் செயல்படுங்கள், வெற்றியை வசப்படுத்திக்கொள்ளுங்கள்!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், நழுவவிட்ட வாய்ப்புகள் போன்றவற்றை குறித்து எந்நேரமும் எண்ணி,எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களை நாம் பார்க்கலாம்.அவ்வாறு கவலைப்படுவதால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. நாம் கவலைப்படுவதால் கவலைகள் தீருவதில்லை. மாறாக மனதின் ஆற்றல் குறைவதோடு,உற்சாகமும் நம்பிக்கையும் தளர்ந்து போகும்.உடைந்த சிற்பத்திற்கு ஒப்பாரி வைக்காமல் புதிய சிற்பத்தை இன்னும் சிறப்பாக அழகாக செதுக்க தொடங்குவதே வாழ்க்கையை நம்பிக்கை உடையதாக மாற்றும்.பிரச்சனை என்றவுடன் ஏற்படும் பயத்தை முதலில் அகற்றி அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு எப்படி வெற்றியாக மாற்றிக் கொள்வது என்று சிந்தித்து அதற்கான செயலில் இறங்குங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்வில் அதுவே முன்னேற்றத்திற்கான படிகளாக அமைந்துவிடும்.

மன்னர் ஒருவர் விசித்திரமான போட்டியை அறிவித்தார்.அதாவது அரண்மனைக் கோட்டையின் வாயிலைக் கைகளால் திறக்க வேண்டும். அப்படித் திறந்து விட்டால் அவர்களுக்கு நாட்டில் ஒரு பகுதி இலவசமாக வழங்கப்படும். ஒரு வேளை அவ்வாறு திறக்கமுடியாமல் போனால் அவர்களின் கைகள் வெட்டப்படும் என்பதுதான் அந்த போட்டி,கைகள் வெட்டப்படும் என்ற நிபந்தனையை கண்டு அனைவருமே பயந்துவிட்டனர்.எதற்காக வலியச் சென்று இந்த போட்டியில் பங்கேற்று கைகளை இழக்க வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் ஒரேயொரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொண்டார்.அவரை எல்லோரும் பயமுறுத்தினர்.கைகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.
அதற்கு அவர் “தோற்றால் என் கைகள் தானே இழப்பேன்,உயிரை அல்லவே”என்றான் தன்னம்பிக்கையுடன்,போட்டியும் நடத்தப்பட்டது அனைவரும் ஆவலோடு வேடிக்கை பார்க்க குழுமி இருந்தனர்.அந்த இளைஞனும் கைகளால் வாயிற் கதவைத் திறக்க முயற்சித்தான்.என்ன ஆச்சரியம்,கதவு சட்டென்று திறந்து கொண்டது.ஏனென்றால் அது தாழ்ப்பாள் போடப்படாமலேயே இருந்தது.தன்னுடைய மக்களில் துணிச்சலுடன் செயல்படுபவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள அரசர் இவ்வாறு செய்தார்.

தோற்றுப்போனால் அவமானம் வந்து சேரும்,எதையாவது இழக்க நேரிடும் என்றெல்லாம் பயந்து போய் நிறைய பேர் நமக்கேன் வம்பு என்று நினைத்து எந்த முயற்சியும் செய்யாமல் இருந்து விடுகின்றனர். நம்பிக்கை மற்றும் மன தைரியத்துடன் கடினமாக முயன்றால் வெற்றி கிடைத்தே தீரும் என்பதற்கு இந்தக் கதையை உதாரணமாகச் சொல்லலாம்.இந்த கதையில் வரும் இளைஞனைப் போல் இந்த உலகில் எத்தனையோ பேர் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அப்படி சாதித்தவர்தான் சிரியாவை சேர்ந்த டிமா அக்தா.சிரியாவைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை டிமா அக்தா.சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு,சிரியாவில் போர் ஆரம்பித்தது.சிலநாள்களிலேயே டிமாவின் வீட்டில் குண்டுகள் போடப்பட்டன.இதில் டிமா பலத்த காயமடைந்தார், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார்.தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது.அதன் பலனால் டிமா உயிர் பிழைத்தார். ஆனால் அவருடைய ஒரு காலை இழக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.காலை இழந்த துயரம் அவரை ஆக்கிரமித்தாலும் உயிர் பிழைத்திருக்கிறேனே என்கிற எண்ணம் மட்டும் அவரை வலிமையானவளாக மாற்றியது. நிலம்,கடல், வான்வழியாகப் போரின் பயங்கரத்திலிருந்து தப்பி ஓடிய ஆயிரக்கணக்கான சிரியர்களைப் போலவே டிமாவின் குடும்பமும் லெபனானில் தஞ்சம் அடைந்தது.

எல்லாப் பெண்களையும் போலவே டிமா விற்கும் எதிர்கால லட்சியம் இருந்தது. ஒரு மாற்றுத்திறனாளியாக இனி என்ன செய்யப்போகிறேன் என்று யோசித்தார்.வேலையில் சேர விரும்பினார்.மாற்றுத்திறனாளி என்பதாலும்,அகதி என்பதாலும் அவருக்கு வேலையும் கிடைக்க வில்லை.அவரை பார்ப்பவர்கள் எல்லாம் நீ இப்படி இருப்பதற்குப் பதில் உயிரிழந்திருக்கலாம் என்றார்கள்.இருந்தபோதும் டிமா மனம் தளரவில்லை,இந்த உலகத்தில் வாழ வேண்டும், வாழ்ந்தால் மட்டும் போதாது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் அவருடைய மனதில் ஆழமாக பதிந்தது.ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்குச் சென்று குடியேறினார். இங்கிலாந்தில் டிமாவுக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.மீண்டும் ஓட முடியும் என்கிற நம்பிக்கை வந்தது.எதையாவது சாதிக்க முடியும் என்று நீங்களே சொல்லிக்கொள்ளும்போது,உங்கள் மனம் உங்களுக்கு ஒரு வழியைக் காட்டும் என்பதை டிமா உணர்ந்தார்.செயற்கைக் காலுடன் ஓட்டப்பந்தயத்திற்கான பயிற்சிகள் எல்லாம் எடுத்துக் கொண்டார்.தீவிர பயிற்சியின் பலனால் 2024ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் பங்கேற்க தகுதிபெற்றார் டிமா.

அது மட்டுமல்ல,டிமா தன்னை ஒரு சமூக ஆர்வலராக மாற்றிக் கொண்டார்.தனக்கு அடைக்கலம் கொடுத்த இங்கிலாந்து நாட்டிற்கு தன்னால் முடிந்த உதவிகளை சமூக அக்கறையுடன் செய்ய முடிவு செய்தார். கோவிட் தொற்றின்போது, அகதிகள் முகாம்களில் தடுப்பூசித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக 70,000 பவுண்டுகளுக்கு மேல் நிதி திரட்டினார்.இவரைப் பாராட்டும் விதமாக பிரிட்டன் அரசு மாற்றுத்திறனாளிகள் கால்பந்து அணியான லயன்ஹார்ட்ஸில் உறுப்பினராக டிமாவைச் சேர்த்து அங்கீகரிக்கப்பட்டார்.மேலும் பி.பி.சி தேர்ந்தெடுக்கப்பட்ட 100 சிறந்த பெண்களில் டிமாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.டிமாவின் கதை சமீபத்தில் பிரபல பாப் நட்சத்திரமான அன்னே-மேரியின் பியூட்டிஃபுல் என்ற இசை ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் டிமா இங்கிலாந்து முழுவதும் பிரபலமானார். தற்போது தன்னைப் போன்ற உடல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தவும்,வலிமையை வெளிப்படுத்தவும் பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளிலும் டிமா ஈடுபட்டு வருகிறார். உடல் குறைபாடுடன் அகதியாக மற்றொரு நாட்டுக்குச் சென்று மன தைரியத்துடன் போராடி, விளையாட்டு வீராங்கனையாக, சமூக ஆர்வலராக சாதித்துக்கொண்டிருக்கும் டிமாவின் வாழ்க்கை இன்றைய பெண்களுக்கு ஒரு உன்னத பாடமாகும். வாழவேண்டும்,ஜெயிக்கவேண்டும், சாதிக்கவேண்டும் என்பதை ஆழ்மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.தோல்வி ஏற்பட்டுவிட்டது.கஷ்டம் வந்துவிட்டது. மகிழ்ச்சி இல்லையே என்று ஒருபோதும் பரிதவிக்க கூடாது. டிமா அக்தாவைப் போல மன தைரியத்துடன் செயல்படுங்கள்,வெற்றியை வசப்படுத்திக்
கொள்ளுங்கள்.

The post மன தைரியத்துடன் செயல்படுங்கள், வெற்றியை வசப்படுத்திக்கொள்ளுங்கள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...