×

சித்தூரில் ஒட்டர் நலச்சங்க அலுவலகம் திறப்பு விழா ஒட்டர் சமூகத்தை எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும்

*சங்கத்தலைவர் வலியுறுத்தல்

சித்தூர் : ஒட்டர் சமூகத்தை எஸ்டி பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க மாவட்ட தலைவர் வலியுறுத்தி பேசினார்.ஆந்திர மாநில ஒட்டர் சங்க மாநில தலைவர் உத்தரவின்பேரில், சித்தூர் மாவட்ட ஒட்டர் நலச்சங்க தலைவராக டி.வி.எஸ்.மணி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, சித்தூர் கிரீம்ஸ்பேட்டை அடுத்த காயத்ரி நகரில் ஒட்டர் நலச்சங்கத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் ஒட்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஊர்ஊராக சென்று கல் உடைத்து, செங்கல் அறுத்து குடும்பம் நடத்தி வருகிறார்கள். இதனால் மிகவும் பின்தங்கியுள்ளார்கள். எனவே, ஒட்டர் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என பலமுறை மாநில அரசுக்கு வற்புறுத்தினோம். ஆனால், இதுவரையில் எந்தவொரு நலத்திட்ட உதவிகளும் வழங்கவில்லை.

மேலும், ஒட்டர் சமூகத்தை சேர்ந்த மக்களை அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து உள்ளது. இதனை ரத்து செய்து எஸ்டி வகுப்பில் சேர்க்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.எனவே, மாநில அரசு உடனடியாக ஒட்டர் சமூகத்தை சேர்ந்த மக்களை எஸ்டி வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை மாநில அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவோம்.

அதேபோல், ஒட்டர் சமூக மக்களுக்கு எங்கு எந்த பிரச்னை வந்தாலும், அந்த பிரச்னையை நான் எதிர்த்து நின்று அதனை தீர்க்க போராடுவேன். ஒட்டர் நலச்சங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதுமே துணை நிற்கும். அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் முன்னின்று பெற்றுத்தர கடுமையாக பாடுபடுவேன். ஒட்டர சமுதாயத்திற்காக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

20 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் மாவட்டத்தில் முதல்முறையாக புதிதாக ஒட்டர் நலச்சங்க அலுவலகத்தை மாவட்ட தலைவர் துவக்கி வைத்தார். இதில், ஏராளமான ஒட்டர் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post சித்தூரில் ஒட்டர் நலச்சங்க அலுவலகம் திறப்பு விழா ஒட்டர் சமூகத்தை எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Otar welfare office ,Chittoor ,Otar ,Sangha ,Otter ,Otar welfare ,Dinakaran ,
× RELATED சித்தூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்...