×

சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்த்தது தென்பெரம்பூர் அணைக்கட்டுக்கு வருகை அதிகரிப்பு

*முதலை ஆபத்து இருப்பதால் மெயின் ஆறுகளில் குளிக்கத்தடை

தஞ்சாவூர் : ஊட்டிக்குள் புகுந்த உணர்வை ஏற்படுத்தும் பூங்காவுடன் அமைந்துள்ள தென்பெரம்பூர் அணைக்கட்டு சுற்றுலாத்தலமாக பிரபலமாகி வருகிறது. கல்லணைக்கு அடிக்கடி சென்று பார்த்து போரடித்து போய் விட்டதால் இப்போது தென்பெரம்பூர் அணைக்கட்டு பக்கம் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.இடமும் ரம்மியம், மனதும் குதூகலம் அடையும். வாரம், மாதம் என்று வேலை, வேலை என்று ஓடிய ஓட்டத்திற்கு ஓய்வு கொடுத்து மனசை ரிலாக்ஸ் படுத்திக்கொள்ள ஒரு சிறந்த இடம் இருக்கிறது.

இயந்திர கதியில் கடிகார முள்ளை விட முன்னே செல்லும் காலமாக மாறி விட்டது. இந்த இயந்திர வாழ்க்கையில் சற்றே ரிலாக்ஸ் ஆக ஒரு சுகமான, ரம்மியமான இடம் இருக்கிறது. ஜில்லென்ற காற்றும், சலசலவென்று பாய்ந்தோடும் தண்ணீரும் மனதை குளிர வைத்து விடும். அந்த இடம் தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் அணைக்கட்டு தான்.

கவலைகளை மறந்து, மனது, உடம்பு புத்துணர்ச்சி பெற்று நம்மை நாமே ரீசார்ஜ் செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை. அத்தகைய சுற்றுலாத்தலமாக உள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தென்பெரம்பூர் அணைக்கட்டு. சிலர் அறிந்தாலும் பலராலும் இன்னும் அறியப்படாமல் உள்ள அருமையான சுற்றுலாத்தலம் தான் இது.

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் அருகே அமைந்துள்ளது தென்பெரம்பூர் அணைக்கட்டு. கல்லணை தலைப்பிலிருந்து வெளியேறுகிறது காவிரியின் கிளை ஆறான வெண்ணாறு. சுழன்றும், தவழ்ந்தும், வேகமாகவும் இருகரைகளையும் தொட்டு தாலாட்டி, முட்டி மோதி கண்களை கொள்ளை கொள்ளும் அழகுடன் வெண்ணாறு வந்து சேர்ந்து நிற்கும் இடமே தென்பெரம்பூர். கடல் போல் காட்சியளிக்கும் தென்பெரம்பூர் அணைக்கட்டு கட்டப்பட்டு நூற்றாண்டுகளை கடந்தும் ஷட்டர்கள் வழியாக வெளியேறும் தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து இன்றும் பார்ப்பவர்களை வியப்படைய செய்கிறது. இங்கிருந்து வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என மூன்று ஆறுகளாக பிரிந்து செல்கிறது. மேலும் ஜம்புக்காவேரி வாய்க்கால், ராஜேந்திரன் வாய்க்கால் என்றும் பிரிந்து செல்கிறது.

இந்த அணைக்கட்டுக்கு அருகிலேயே இருபுறமும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் நம் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரரின் சிலை, சுற்றுச்சுவரில் தேசியத்தலைவர்கள் படங்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடர்த்தியாக வளர்ந்து வெயிலை தரைக்கு அனுப்பாமல் உயர்ந்து நிற்கும் மரங்களுக்கு நடுவே உள்ள பூங்கா மனதை ரிலாக்ஸ் படுத்தும். ஓடும் தண்ணீரில் மோதி நம்மீது வீசும் காற்றும் ஜில்லென்று மனதையும் குளிர வைக்கும். ஊட்டிக்குள் புகுந்த உணர்வை ஏற்படுத்தும். மரங்களின் அடிப்பகுதியை சுற்றி வட்ட வடிவில் உட்கார்வதற்காக சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள மண் திட்டில் விண்ணை நோக்கி வளர்ந்துள்ள இந்த மரங்கள் காற்றின் வேகத்தில் குளுகுளுவென்று இயற்கை காற்றை அள்ளி வழங்கி நம்மை தாலாட்டும். வெண்ணாற்றின் ஓரத்தில் சிறிய அளவில் ஜம்பு காவிரி என்ற பாசன வாய்க்கால் தன் பயணத்தை தொடங்குகிறது. குறைந்த அளவில் தண்ணீர் செல்லக்கூடிய இதில் அச்சமின்றி எவ்வித ஆபத்தும் இல்லாமல் குளித்து மகிழலாம். மெயின் ஆறுகளில் ஆழமும், முதலை ஆபத்தும் இருப்பதால் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அணைக்கு மேல் இருசக்கர வாகனம் மட்டுமே செல்ல முடியும். அதுவும் எதிரில் வாகனம் வரமுடியாது. வார இறுதிநாட்களில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் சாப்பாட்டை கட்டி வந்து குடும்பத்தோடு சுற்றி பார்த்து செல்கின்றனர்.திருச்சியிலிருந்து கல்லணை-திருக்காட்டுப்பள்ளி வழியாக பூதலூர் வந்து தென்பெரம்பூரை அடையலாம். தஞ்சாவூரிலிருந்து கள்ளப்பெரம்பூர் செல்லும் வழியில் தென்பெரம்பூருக்கு வரலாம். சொந்த வாகனங்களில் வந்து மனமாற இளைப்பாறி கவலைகள் மறந்து செல்லலாம்.

ஆஹா அற்புதமான இடம் என்று குழந்தைகளும் துள்ளிக்குதிப்பார்கள். அந்தளவுக்கு பிரபலமாகி வருகிறது தென்பெரம்பூர் அணைக்கட்டு. கல்லணைக்கு அடிக்கடி சென்று பார்த்து போரடித்து போய் விட்டதால் இப்போது தென்பெரம்பூர் அணைக்கட்டு பக்கம் சுற்றுலா பயணிகளின் கவனம் திரும்பியுள்ளது.

கடல் போல் காட்சியளிக்கும் தென்பெரம்பூர் அணைக்கட்டு கட்டப்பட்டு நூற்றாண்டுகளை கடந்தும் ஷட்டர்கள் வழியாக வெளியேறும் தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து இன்றும் பார்ப்பவர்களை வியப்படைய செய்கிறது.

கல்லணைக்கு அடிக்கடி சென்று பார்த்து போரடித்து போய் விட்டதால் இப்போது தென்பெரம்பூர் அணைக்கட்டு பக்கம் சுற்றுலா பயணிகளின் கவனம் திரும்பி யுள்ளது.

The post சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்த்தது தென்பெரம்பூர் அணைக்கட்டுக்கு வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tenperambur Dam ,Thanjavur ,South Perambur ,Ooty ,
× RELATED தஞ்சாவூர் அருங்காட்சியம் எதிரில்...