×

மைசூர் அரண்மனை

இந்தோ சரசெனிக் பாணி கட்டடம்

இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் அமைந்துள்ள இரண்டு அரண்மனைகளில் பிரதானமானது அம்பாவிலாஸ். இந்த பகுதி ஆரம்பத்தில் யது வம்ச உடையார் குடும்பத்தினரால் விஜயநகரப் பேரரசின்கீழ் சிற்றரசாக 1565 வரையிலும், பின் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டுவந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. நரசராஜ உடையார் மற்றும் சிக்க தேவராய உடையார் ஆகிய அரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்த தற்போதைய தெற்குக் கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின்கீழ் கொண்டுவரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.மைசூர் அரண்மனை 1897ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட துவங்கப்பட்டு, பதினைந்து ஆண்டுக் கால முடிவில் 1912ம் ஆண்டில்தான் கட்டி முடிக்கப்பட்டது. அரண்மனையின் முன் நுழைவு வாயிலிலிருந்து மைதானமும், அடுத்து ராச தர்பார் மண்டபமும், அடுத்த உள்பகுதியில் மல்யுத்த மைதானம், அடுத்து அந்தப்புரம் என சுமார் 175 அறைகளையும் கொண்டுள்ளது.

மைசூர் அரண்மனை தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரமாகும். மிகப் பெரிய நுழைவு வாயில், திறந்தவெளி அறைகள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த அரண்மனைக்குள் ஆயுத அறை, நூலகம், லிஃப்ட் வசதி, வேட்டை அறை, பிரத்யேகப் படுக்கை அறைகள் என அனைத்தும் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளன.இது 1896 தசரா விழாவின்போது எரிந்து நாசமானது. நான்காம் கிருஷ்ணராஜ உடையார் மற்றும் அவரது தாயார் மகாராணி கெம்ப நஞ்சம்மன்னி தேவி ஆகியோர் புதிய கட்டடத்தை கட்ட ஆங்கிலேயக் கட்டடக் கலைஞர் ‘ஹென்றி இர்வினை’ நியமித்தனர். இதற்கிடையில், அரச குடும்பம் ஜெகன்மோகன் அரண்மனையின் அருகில் அரண்மனை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மைசூர் அரண்மனைப் பிரிவில் நிர்வாகப் பொறியாளரான பி.பி. ராகவலு நாயுடு இந்த கட்டுமானத்தை மேற்பார்வையிட்டார். அவர் டெல்லி, மெட்ராஸ் மற்றும் கல்கத்தாவிற்குச் சென்றபோது விரிவான கட்டடக்கலை ஆய்வுகளை மேற்கொண்டார். மகாராஜா ஜெயச்சாமராஜா உடையாரின் ஆட்சிக் காலத்தில் 1930ம் ஆண்டில் இந்த அரண்மனை மேலும் விரிவுபடுத்தப்பட்டது. அரண்மனையின் குவிமாடங்களின், கட்டடக்கலைப் பாணி பொதுவாக இந்தோ- சரசனிக் பாணி என விவரிக்கப்படுகிறது. இந்து, முகலாய, ராஜ்புத் மற்றும் கோதிக் பாணிகளின் கலவையாகும். இது பளிங்கு குவிமாடங்களைக்

கொண்ட மூன்று மாடி கல் அமைப்பாகும். மேலும் 145 அடியுடன் 5 மாடி கோபுரத்தைக் கொண்டுள்ளது. 19, 20-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டுமானங்கள் பெரும்பாலும் இந்த கலையை சேர்ந்தவை. உயர்ந்த கோபுரங்கள், குவிமாடங்கள் இஸ்லாமிய கலையம்சத்தையும், கட்டடங்களில் முனைகளில் அழகான பூப் போன்ற வேலைப்பாடுகள், அழகான வேலைப்பாடுகள் உள்ள விதானமும் கொண்டவை. சென்னை மட்டுமின்றி டெல்லி தலைமைச் செயலகக் கட்டடம், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையக் கட்டடம் போன்று பல இடங்களில் இது போன்ற கட்டுமானத்தைப் பார்க்கலாம். இந்த அரண்மனையில் உள்ள கிழக்கு வாசல் (முன் வாயில், தசராவின்போது மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே திறக்கப்பட்டது. தெற்கு நுழைவு வாயில் பொதுமக்களுக்காகவும், மேற்கு நுழைவு வாயில் பொதுவாக தசராவின்போது மட்டுமே திறக்கப்படுகிறது. இரண்டாவது அரண்மனை லலித மகால். இது மைசூர் சாமுண்டி மலை அருகில் அமைந்துள்ள அரண்மனை ஆகும். இது 1921ல் மைசூரை ஆண்ட மன்னர் நான்காம் கிருஷ்ண உடையாரால் கட்டப்பட்டது. இதன் தளம் மற்றும் படிக்கட்டுகள் இத்தாலி பளிங்கு கற்களினாலும், (தொங்கும்) சர விளக்கு பெல்ஜியம் படிகக் கண்ணாடியிலும் ஆனது. தரை விரிப்புகள் பாரசீகக் கம்பளம் கொண்டு அழகூட்டப்பட்டுள்ளது.

 

The post மைசூர் அரண்மனை appeared first on Dinakaran.

Tags : Mysore Palace ,Amba ,Vilas ,Mysore, Karnataka, India ,
× RELATED தினமும் அம்மனை வழிபாடு செய்வது சிறப்பு!