
ஊட்டி : ஊட்டி படகு இல்ல வளாகத்தில் சாகச விளையாட்டுகளான தொங்குபாலம், ஜிப் லைன், ஜிப் சைக்கிள் மற்றும் பங்கி ஜம்பிங் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவதால் ஆண்டு முழுவதும் உள்மாநிலம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை புரிகின்றனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஊட்டி படகு இல்லத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஊட்டி படகு இல்லம் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு சாகச விளையாட்டுகள் ஏதுவும் இல்லாமல் இருந்தது. படகு இல்லத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல வகையான சாகச விளையாட்டுக்களான ஜிப் லைன், ஜிப் சைக்கிள், ஜெயன்ட் ஸ்விங், ரோலர் கோஸ்டர், பங்கி ஜம்பிங், தொங்கு பாலம், 4 இருக்கைகள் கொண்ட ஹியுமன் கெய்ரோ ஆகிய சாகச விளையாட்டுகளுக்கான கட்டமைப்புகளை ரூ.5 கோடியில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் துவக்கப்பட்டன.
இதில் ஏரியின் நடுவே ஒரு கரையில் இருந்து மறு கரை வரை 120 அடி உயரத்தில் 450 அடி நீளத்திற்கு தொங்குபாலம் மற்றும் அதில் ஜிப் லைன் மற்றும் ஜிப் சைக்கிளிங் ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் தேனிலவு படகு இல்ல பகுதியில் ரெஸ்டாரண்ட் அமைக்கும் பணிகள் மற்றும் ட்ரீ அவுஸ் எனப்படும் மர வீடுகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அடுத்த கோடை சீசனுக்கு முன் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர படகு இல்லத்தை சுற்றிலும் அமைக்கப்படும் தடுப்புச்சுவர்களில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியங்கள் குறித்த ஓவியங்களை வரையவும், படகு உணவகம் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
The post ஊட்டி படகு இல்ல வளாகத்தில் சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமான பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.