×

ஏழை மாணவர்களின் கல்விக்குக் கைகொடுக்கும் டீம் எவரெஸ்ட்!

தன்னுடைய சக மாணவனின் வறுமையைக் கண்டு வருந்தியதோடு நின்றுவிடாமல், தன் முதல் மாத சம்பளத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவி செய்ய ஆரம்பித்ததன் விளைவாகத் துளிர்விட்டதுதான் தற்போது 17 வருடங்களைக் கடந்து இயங்கிக்கொண்டிருக்கும் டீம் எவரெஸ்ட் எனும் ஏழை மாணவர்களின் துயர்போக்கி கல்விக்குக் கை கொடுக்கும் தன்னார்வ அமைப்பு.திருவண்ணாமலையில் சேவையைத்தெடங்கி சென்னையில் இயங்கிவரும் இவ்வமைப்பானது அரசுப் பள்ளி மாணவர்கள் தரமான கல்வியைக் கற்க உதவித் தொகைகளை வழங்குவது, சீருடைகள், நோட்டு புத்தகங்கள், இலவச டியூஷன் எடுப்பது, பெற்றோரை இழந்த ஆதரவற்ற பிள்ளைகளைப் படிக்கவைப்பது, மாணவர்களுக்குச் சமூக சேவையின் அவசியத்தையும், அறத்தையும் போதிப்பது என பல்வேறு சமூகம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இவ்வமைப்பின் கல்விச் செயல்பாடுகளை இதன் நிறுவனர் கார்த்தி வித்யா நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தேன். எங்கள் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில்தான் பத்தாம் வகுப்பு வரையிலும் படித்தேன். ஏழாம் வகுப்பு படிக்கும்போது என் சக மாணவன் ஒருவன் வறுமை காரணமாக திடீரென்று சில நாட்கள் பள்ளி வருவதையே தவிர்ப்பான். அடுத்து கொஞ்ச நாள் கழித்துதான் பள்ளிக்கு வருவான். அவனிடம் நோட்டு புத்தகம், பென்சில், பேனா வாங்கவே பணம் இருக்காது. அவன் அப்பா சைக்கிள் கடை வைத்திருந்தார்.நோட்டு புத்தகங்கள் அவசியம் வாங்கியே ஆகவேண்டுமெனில் அவன் சைக்கிள் கடைக்குச் சென்று சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி வேலைபார்த்து அந்த பணத்தை கொண்டுவந்துதான் வாங்க வேண்டும். அவனுடைய இந்த ஏழ்மை நிலை ஏழாம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பின் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மாணவனாகத் தேர்வானேன். பிறகு +1, +2 படிக்கச் சென்னைக்கு வந்தேன்.
சென்னைக்கு வந்த பிறகு பள்ளியில் என்னுடன் படித்த அத்தனை பேரும் பொருளாதார ரீதியில் மேலோங்கி இருந்தனர். அதுமட்டுமில்லாமல் பள்ளியில் தகுதியான ஆசிரியர்களால் தரமான கல்வியும் வழங்கப்பட்டது. இங்குதான் பணம் இல்லாதவனுக்கு மறுக்கப்படும் தரமான கல்வியையும், பணம் இல்லாதவனின் நிலையையும், சமூகப் பாகுபாட்டின் யதார்த்தத்தையும் உணர்ந்தேன். அப்போதே இந்த சமூகத்திற்கு ஏதாவது பண்ண வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது’’ என்கிறார் கார்த்தி.

எங்கிருந்து பிறருக்கு உதவும் பணி தொடங்கியது என்பதை விவரிக்கும்போது, ‘‘நான் கல்லூரிப் படிப்பை 2002ல் சேலத்தில் தொடங்கினேன். அங்கு மெட்டலார்ஜிக்கல் எஞ்சினியரிங் படித்தபோது கேம்பஸ்
இன்டர்வியூவிலேயே நல்ல சம்பளத்துடன் ஐடி கம்பெனி வேலை கிடைத்துவிட்டது.2006ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கிடைத்த முதல் சம்பளத்தை எடுத்துக்கொண்டு முதல் வேலையாகத் திருவண்ணாமலை சென்று சிறுமூர் கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், சீருடை வாங்கித் தர நினைத்தேன். அதற்கு உதவ நினைப்பவர்கள் உதவலாம் என்று என்னுடன் பணிபுரிந்த நண்பர்களிடம் கூறினேன். அப்போது 3 பேர் உதவ முன் வந்தார்கள். அப்படி 2006ம் ஆண்டு உருவானதுதான் டீம் எவரெஸ்ட் எனும் கல்விக்கான தன்னார்வ அமைப்பு’’ என்று மகிழ்ச்சி பெருக தெரிவித்தார் கார்த்திக்.

டீம் எவரெஸ்ட்டின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து கூறுகையில், ‘‘கிராமப்புற சேவை மற்றும் நகர்ப்புற சேவை என இவ்வமைப்பை இரண்டாகப் பிரித்து கல்விச் சேவையை செய்யத் தொடங்கினோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்துக் கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கென நவீன கற்றல் வசதியுடன் இலவச கற்றல் மையம் உருவாக்கியது, வார இறுதி நாட்களில் எம்.எஸ்.ஆபிஸ், மைக்ரோ சாஃப்ட் வேர், பவர் பாயின்ட் என ஒவ்வொரு வாரமும் கணினி பயிற்சி கொடுத்து சான்றிதழ் வழங்குவது, பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி கல்வி கற்கச் செய்தல் ஆகியவற்றை செயல்படுத்தினோம்.பிளஸ் 2 தேர்வில் 70 % மதிப்பெண் எடுத்து பெற்றோரை இழந்த அல்லது தாயையோ தந்தையையோ இழந்த மாணவர்கள் உயர்கல்வியைக் கற்க ஆண்டுதோறும் ரூ.30,000 என நான்கு ஆண்டுகள் உதவித் தொகை அளிக்கிறோம். மேலும் அவர்களுக்கு சாஃப்ட் ஸ்கில் பயிற்சி வழங்குவது, கணினி பயிற்சி, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இன்டர்ன்ஷிப் அழைத்துச் செல்வது என மாணவர்கள் இளநிலைப் பட்டம் படிக்கும்போதே சிறந்த வேலைவாய்ப்புக்குத் தங்களைத் தயார் செய்துகொள்ளப் பயிற்சி வழங்கப்படுகிறது.

கல்வி பயிற்சியோடு நில்லாமல் ஒவ்வொரு வாரமும் அவர்களைக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று சமூகப் பிரச்னைகளை உள்வாங்கச் செய்து தங்களால் இயன்ற சேவையைச் செய்ய வைத்து மாணவர்களுக்கு அறப்பணிகளைப் போதிக்கிறோம். இப்பணிகளை முழுமையாக முறையாகச் செய்ய வேண்டும் என்பதற்காகவே 2014ம் ஆண்டு ஐடி கம்பெனி வேலையை விட்டுவிட்டேன். என் மனைவி மட்டுமே வேலைக்குச் சென்று வந்த நிலையில் 2020ல் மனைவியும் பணியை விட்டு விலகி என்னோடு சேர்ந்து தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டார். கடந்த 7 வருடத்தில் மட்டுமே 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 2,000 பேர் பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளோம். இப்போது எங்கள் குழுவில் தமிழகம், இந்தியா, வெளிநாடு என ஒரு லட்சம் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இந்த கல்விக்கானப் பணிகளைத் தற்போது சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு ஆகிய நகரங்களை மையமாக வைத்து செயல்படுத்திவருகிறோம்.

டீம் எவரெஸ்டின் நோக்கம் தனி நபர்களை தொண்டு செய்ய ஊக்குவிப்பதும், ஏழை மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை வழங்குவதும் ஆகும். கடந்த 17 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி சார்ந்த உதவிகள் செய்துள்ளோம்.வருங்காலத்தில் மனிதநேயமிக்க ஒரு தூய சமூகத்தை உருவாக்குவதையே தன் இலக்காகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பில் தற்போது இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து பத்தாயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்’’ என்ற கார்த்திக் கடைசியாக ‘‘ஒரு மாணவனின் பொருளாதாரம் அவனுடைய கல்வி உரிமைக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதே எங்கள் அமைப்பின் ஆசை லட்சியம் ’’ என்று பெருமிதத்தோடு கல்வி சேவைகள் குறித்து விரிவாக பேசி முடித்தார் கார்த்தி.
– முத்து

The post ஏழை மாணவர்களின் கல்விக்குக் கைகொடுக்கும் டீம் எவரெஸ்ட்! appeared first on Dinakaran.

Tags : Team Everest ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...